லக்னோ: உலக அரங்கில் இந்தியா ஒரு பிரகாசமான இடமாக மாறியதுபோல் உத்தரப் பிரதேச மாநிலமும் மாற்றம் கண்டுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், தொழில் துறையினர், உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் வருகை தருவதன் மூலம் வர்த்தக வாய்ப்புகள், கூட்டாண்மைக்கான வழிமுறைகள் குறித்து ஆராயப்படும் என்றார்.
ஐந்து டிரில்லியன் டாலர் பொருளியல் என்ற இந்தியாவின் இலக்கு சாத்தியமாகும் என்று அதற்கு முதலீட்டாளர்கள் மாநாடு கைகொடுக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள சிறு, குறு தொழில்களின் வளர்ச்சி பொருளியல் முன்னேற்றத்துக்குப் பங்களிக்கும் என்று குறிப்பிட்ட அவர், இத்தகைய மாநாடுகள் மூலம் உத்தரப் பிரதேசம் மாநிலம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாடும் வளர்ச்சியடையும் என்றார்.
இதற்கிடையே, சிறு குறு தொழில்துறையில் மட்டும் உத்தரப் பிரதேசத்துக்கு மேலும் ரூ.1.42 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் கிடைத்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்தது.
பிற துறைகளிலும் முதலீடுகள் குவியும் என எதிர்பார்ப்பதாக அரசுத்தரப்பு தெரிவித்துள்ளது.

