புதுடெல்லி: ரஷ்யா சென்ற இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அங்கு அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புட்டினை நேரில் சந்தித்துப் பேசினார். இது ஓர் அரிய நிகழ்வு என ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உலக நாடுகளின் தலைவர்களை நேருக்கு நேர் சந்திப்பதற்கு ரஷ்ய அதிபர் புட்டின் அவ்வளவு எளிதில் முன்வருவதில்லை. அதேபோல் அனைத்துலக மாநாடுகளில் பங்கேற்றாலும், குறிப்பிட்ட நாடுகளின் தலைவர்களை மட்டுமே அவர் சந்திப்பது வழக்கம்.
இந்நிலையில், இந்திய பாதுகாப்பு ஆலோசகருடனான சந்திப்புக்கு ஒப்புக்கொண்டதும் அஜித் தோவலுடன் அவர் சுமார் ஒருமணி நேரம் ஆலோசனை மேற்கொண்டதும் தெரியவந்துள்ளது.
அனைத்துலக பாதுகாப்புச் சூழல் குறித்தும் இருநாடுகளின் உறவுகள் தொடர்பாகவும் இருவரும் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
எனினும் இரு தரப்புமே விரிவான தகவல்களை வெளியிடவில்லை.
தமது இந்தப் பயணத்தின்போது ரஷ்ய அதிபரை இருமுறை சந்தித்துள்ளார் அஜித் தோவல்.
ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக சீனா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்ற பேச்சுவார்த்தையில் அவரும் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் அதிபர் புட்டினும் இருந்தார்.
அதன் பின்னர் தம்மைச் சந்திக்க வருமாறு அஜித் தோவலுக்கு அதிபர் புட்டின் அழைப்பு விடுத்ததாகவும், அவர் இவ்வாறான திடீர் சந்திப்புகளில் பங்கேற்பது மிக அரிது என்றும் மாஸ்கோ தகவல்கள் தெரிவிக்கின்றன.

