கௌஹாத்தி: அசாம் மாநிலத்தில் சிறார் திருமணத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு கடந்த ஓராண்டில் மட்டும் 6.2 லட்சம் சிறுமிகள் கருவுற்றது தெரியவந்துள்ளது.
சிறார் திருமணம் தொடர்பாக கைதானோர் எண்ணிக்கை 2,763 ஆக அதிகரித்துள்ளது என்றும் எதிர்வரும் 2026ஆம் ஆண்டுக்குள் குழந்தைத் திருமணத்தை முற்றிலும் ஒழிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அசாம் அரசு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, மாநில அரசின் நடவடிக்கையால் தவறு செய்யாதவர்களும் தண்டிக்கப்படுவதாக ஒரு தரப்பினர் குரல் எழுப்பி உள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்களை காவல்துறை மீட்டதாகக் கூறப்படும் நிலையில், அமைதியான தங்கள் வாழ்க்கை சீர்குலைந்துவிட்டதாக பல பெண்கள் கூறுவதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
பௌசதாரி கிராமத்தைச் சேர்ந்த ஜஹாநரா கத்துன் என்ற பெண் கூறுகையில், கடந்த 2018ஆம் ஆண்டு 17 வயதில் தாம் மொஹம்மட் அஹிருல் என்பவரைக் காதலித்து மணந்ததாகவும் 2021ல் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
"நான் நிம்மதியாக வாழ்ந்து வந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்களில் நானும் சேர்க்கப்பட்டுள்ளேன். என் கணவரையும் மாமனாரையும் கைது செய்தனர்," என்றார்.
"காவல்துறை நடவடிக்கையால் பல குடும்பங்கள் பிரிந்துவிட்டன. சம்பாதிக்கும் குடும்ப உறுப்பினர்கள் கைதாகி சிறையில் உள்ளதால் ஏற்கெனவே ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்கள் தவிப்புக்கு ஆளாகி உள்ளன. இதனால் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது," என ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

