லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் ரிலையன்ஸ் குழுமம் ரூ.75,000 கோடி முதலீடு செய்யும் என அதன் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.
இதற்கிடையே, நாட்டின் முன்னணி தொழிலதிபர்கள் பலரும் அம்மாநிலத்தில் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
உத்தரப் பிரதேச அரசு ஏற்பாடு செய்திருந்த அனைத்துலக முதலீட்டாளர்கள் மாநாட்டையொட்டி முகேஷ் அம்பானியின் அறிவிப்பு வெளியானது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரிலையன்ஸ் நிறுவனம் அம்மாநிலத்தில் முதலீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றார் அவர்.
சில்லறை வணிகம், புதுப்பிக்கத்தக்க எரிஆற்றல் உள்ளிட்ட துறைகளில் ரிலையன்ஸ் முதலீடு செய்கிறது.
இதற்கிடையே, உத்தரப் பிரதேசத்தில் ஆதித்ய பிர்லா குழுமம் ரூ.25,000 கோடி முதலீடு செய்கிறது. அம்மாநிலம் பெரும் மாற்றங்களை அடைந்து வருகிறது என்றும் இதனால் முதலீட்டாளர்கள் குவிகின்றனர் என்றும் அக்குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா கூறியுள்ளார்.
டாடா சன்ஸ் குழுமத்தின் 18 நிறுவனங்கள் உத்தரப் பிரதேசத்தில் கிளைபரப்பி உள்ளன என்றும் ஏறத்தாழ 50 ஆயிரம் பேர் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர் என்றும் அதன் தலைவர் என்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் அனைத்து முக்கிய நகரங்களையும் நாட்டின் பிற முக்கிய பகுதிகளுடன் இணைக்கும் திட்டத்தை ஏர் இந்தியா நிறுவனம் மேற்கொள்ளும் என்றார் அவர்.

