செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
a7b399dd-422d-475a-af67-9b2881ad0d37
-

ஆறு மாநிலங்களில் சிறுமிகளுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் தடுப்பூசி

புதுடெல்லி: தமிழகம் உட்பட ஆறு மாநிலங்களில் கர்ப்பப்பை புற்றுநோய் தடுப்பூசி போட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் ஏறத்தாழ 80 ஆயிரம் பெண்கள் இப்புற்றுநோய்க்குப் பலியாகின்றனர். இது கர்ப்பப்பை புற்றுநோயால் உலக அளவில் பாதிக்கப் படும் பெண்களின் எண்ணிக்கையில் 25 விழுக்காடு ஆகும். இதனால் 35,000 பேர் உயிரிழக்கின்றனர் என்றும் இதைத் தவிர்க்க 9 முதல் 14 வயதுடைய சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுப்பதற்கான 'எச்பிவி' தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக தமிழகம், கர்நாடகா, மிசோரம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேச மாநிலங்களில் தடுப்பூசி போடும் நடவடிக்கை வரும் ஜூன் மாதம் தொடங்கும் என்றும் இதன் மூலம் 2.55 கோடி சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இரு வடகிழக்கு மாநிலங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

புதுடெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் அடுத்தடுத்து லேசான நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் அசாம் மாநிலத்தின் நாகோன் மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 4 புள்ளிகளாகப் பதிவான நிலையில், உயிருடற் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் அடுத்த 12 மணி நேரத்தில், மற்றொரு வடகிழக்கு மாநிலமான சிக்கிமிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி நாட்டைப் போல் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளிலும் நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளதாக சில செய்திகள் வெளியாகி உள்ளது.

காணொளி வசதி மூலம் பிரசவம்; மருத்துவருக்கு குவியும் பாராட்டுகள்

ஸ்ரீநகர்: பனிப்பொழிவு காரணமாக மருத்துவமனைக்கு செல்ல இயலாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு 'வாட்ஸ்ஆப்' மூலம் பிரவசம் பார்த்த மருத்துவருக்கு பாராட்டுகள் குவிகின்றன. காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கெரன் என்ற சிற்றூரைச் சேர்ந்த அந்தக் கர்ப்பிணிப் பெண், ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்டார். வேறு சில உடல்நலப் பிரச்சினைகளும் இருந்ததால் அதிக வசதிகளற்ற சுகாதார நிலையத்தில் பிரசவம் பார்ப்பதில் சிக்கல் நிலவியது. கடும் பனிப்பொழிவு காரணமாக காஷ்மீரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சுகாதார நிலைய ஊழியர்கள், கிரால்போரா மாவட்ட மருத்துவமனையில் உள்ள மகப்பேறு மருத்துவர் ஃபர்வைசுக்கு தகவல் தெரிவிக்க, அவர் உடனடியாக காணொளி வசதி மூலம் பிரசவம் பார்க்கத் தயாரானார். அவரது அறிவுறுத்தல்படி சுகாதார நிலைய ஊழியர்கள் செயல்பட, சுகப்பிரசவத்தில் கர்ப்பிணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

ரயிலின் குறுக்கே தள்ளிவிடப்பட்ட பதினொரு பசுக்கள் உயிரிழந்தன

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஓடும் ரயிலுக்கு குறுக்கே தள்ளிவிடப்பட்ட 11 பசுக்கள் உயிரிழந்தன. அங்குள்ள சம்பல் மாவட்டம், லாராவன் கிராமத்தில் ஏராளமான பசுக்கள் பயிர்களை நாசம் செய்வதாக விவசாயிகள் சாடுகின்றனர். பலமுறை புகார் தெரிவித்தும் உள்ளாட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கோபமடைந்த விவசாயிகள் தங்கள் நிலத்தில் சுற்றித்திரிந்த 24 பசுக்களைப் பிடித்து, அவ்வழியே சென்ற விரைவு ரயில் மீது தள்ளிவிட்டனர். இதில் 11 பசுக்கள் உயிரிழந்தன. மற்ற பசுக்கள் படுகாயம் அடைந்தன. இது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.