'பாதுகாப்புத்துறை ஏற்றுமதி கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆறு மடங்கு அதிகரிப்பு'
பெங்களூரு: இந்தியா தற்போது புதிய உயரங்களைத் தொட்டுள்ளதுடன், அவற்றையும் கடந்து சென்று கொண்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் நேற்று ஏரோ இந்தியா விமான கண்காட்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய அவர், அக்கண்காட்சி இந்தியாவின் வளர்ச்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டு என்றார்.
பல தலைமுறைகளாக இந்தியா பாதுகாப்புத் துறைக்கு தேவைப்பட்ட அனைத்தையும் இறக்குமதி செய்து கொண்டிருந்தது என்று குறிப்பிட்ட பிரதமர், தற்போது 75 நாடுகளுக்கு பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா மாறிஉள்ளது என்றார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும், இந்த ஏற்றுமதியானது ஆறு மடங்கு அதிகரித்துள்ளதாக அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
புதிய இந்தியாவின் திறமைக்கு பெங்களூருவின் வான்வெளி சாட்சியாகி உள்ளது என்றும் இந்தக் கண்காட்சியில் நூறு நாடுகள் பங்கேற்றிருப்பது உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது என்றும் பிரதமர் மோடி கூறினார்.
"ஏரோ இந்தியா' கண்காட்சி இந்தியாவின் புதிய அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது. இது வெறும் கண்காட்சி மட்டும் இல்லை. இது இந்தியாவின் பலம். இக்கண்காட்சியில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை கடந்தகால சாதனைகள் அனைத்தையும் முறியடித்துள்ளது," என்றார் பிரதமர் மோடி.
இந்தியாவின் குறிக்கோள்
இதற்கிடையே, துடிப்பான, உலகத் தரம் வாய்ந்த உள்நாட்டு பாதுகாப்புத் துறையை உருவாக்குவதே மத்திய அரசின் குறிக்கோள் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் 'ஏரோ இந்தியா 2023' நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர், எதிர்வரும் 2024ஆம் ஆண்டுக்குள் பாதுகாப்பு துறை சார்ந்த ஏற்றுமதி மதிப்பை 25,000 கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
பாதுகாப்புத் துறையில் இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்வதே அரசின் இலக்கு என்று தெரிவித்த அவர், அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அரசு உறுதி பூண்டுள்ளது என்றார்.
"இதன் மூலம் நாடு வளர்ச்சி காணும். இந்த நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட நட்பு நாடுகள், 800 கண்காட்சியாளர்கள் பங்கேற்கின்றனர். 'ஏரோ இந்தியா 2023' ஒரு பெரிய நிகழ்வாக இருக்கும் என்று நாங்கள் கற்பனை செய்தோம். ஆனால், அதையும் கடந்த பிரம்மாண்டமான நிகழ்வாக உருவெடுத்துள்ளது," என்றார் அமைச்சர் ராஜ்நாத் சிங்.

