லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற அனைத்துலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் ஏறத்தாழ 95 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
மாநாட்டின் நிறைவு விழாவில் பேசிய அவர், பல்வேறு முதலீட்டாளர்கள் மூலம் உத்தரப் பிரதேசத்துக்கு ரூ.33.50 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
"இந்த முதலீடுகள் மாநில வளர்ச்சிக்குப் பெருமளவு உதவும் என்றும் இதன் மூலம் முதலீட்டுக்குப் பாதுகாப்பான மாநிலமாக உத்தரப் பிரதேசம் உருவெடுத்துள்ளது என்றும் முதல்வர் யோகி கூறினார்.
மேலும், முன்பு தலைநகர் டெல்லியை ஒட்டியுள்ள உத்தரப் பிரதேச பகுதிகளில் மட்டுமே முதலீடுகள் குவிந்ததாகவும் இப்போது மாநிலத்தின் 75 மாவட்டங்களுக்கும் புதிய முதலீட்டுத் திட்டங்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
"தொழில்முனைவர் ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நிலை முதல் களத்தில் தங்கள் முதலீட்டை வழங்குவது வரை அவர்களுக்கு உதவுவதற்காக 'ஊக்குவிப்பு கண்காணிப்பு அமைப்பு' போன்ற வெளிப்படையான ஒற்றைச் சாளர அமைப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன," என்றார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.