புதுடெல்லி: அதானி விவகாரம் தொடர்பாக நிபுணர் குழு விசா ரிக்க எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் ஹிண்டன் பர்க் ஆய்வு நிறுவன அறிக்கை யால், அதானி நிறுவனங்களின் பங்குகள் ஒரு சில நாள்களுக்குள் 120 பில்லியன் டாலரை இழந்தது. இதனால், ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்கள் பேரிழப்புக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவன அறிக்கையின் உண்மைத் தன்மை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தவேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இதுகுறித்து மத்திய அரசின் சார்பில் முன்னிலையான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் பதிலளித்தபோது, ''எதிர்காலத்தில் முதலீட்டாளர்கள் நலன் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய உச்ச நீதிமன்றம் குழுவை அமைத்தால் அதில் மத்திய அரசுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. இவ்விவகாரத்தை கையாளும் திறன் செபிக்கு உள்ளது,'' என்று தெரிவித்தார்.
இதையடுத்து, அடுத்தகட்ட விசாரணையை வரும் வெள்ளிக் கிழமைக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், ஹிண்டர்ன்பர்க் - அதானி விவகாரம் குறித்து பாஜக எதையும் மறைக்கவோ அல்லது யாரைப் பார்த்தும் பயப்படவோ இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.
இதனிடையே, தனது சொந்த தொகுதியான கேரளாவின் வயநாட்டுக்குச் சென்ற காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, "பிரதமர் நரேந்திர மோடிக்கும் அதானிக்குமான தொடர்பை நாட்டு மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம் என்பதால், இந்த விஷயத்தை நாடாளுமன்றத்தில் பேசி வருவதாக தெரிவித்தார்.
மோடியுடன் சேர்ந்து அதானி வெளிநாடுகளுக்குப் பயணம் சென்றபோதெல்லாம் அவருக்கு அந்நாடுகளின் ஒப்பந்தங்கள் கிடைத்தது எப்படி என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் அதானி விவகாரம் குறித்துப் பேசும்போதெல்லாம் பிரதமர் மோடி எத்தனை முறை தண்ணீர் குடிக்கிறார் என்று பாருங்கள் என்று கூறிய அவர், தண்ணீர் குடிக்கும்போது பிரதமரின் கைகள் நடுங்குவதை கவனியுங்கள் என்றும் கூறினார்.
அதானி விவகாரத்தில் ஒருநாள் உண்மை வெளிவந்தே தீரும் என்று கூறிய ராகுல் காந்தி, பிரதமரை குற்றம் சாட்டிப் பேசினாலும் தனது பேச்சு மிகவும் கண்ணியமாக இருந்ததாகக் கூறினார்.

