புதுடெல்லி: அமெரிக்க, இந்திய உறவின் முக்கியத்துவம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இந்திய பிரதமர் மோடியும் பேச்சு நடத்தியுள்ளனர்.
அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடமிருந்து ஏர் இந்தியா நிறுவனம், 220 விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய் துள்ள வேளையில் இரு தலைவர்களும் நேற்று முன்தினம் தொலைபேசி வழியாக கலந்துரையாடினர்.
ஏர் இந்தியா வாங்கும் விமானங்களின் மதிப்பு 34 பில்லியன் அமெரிக்க டாலர். மேலும் 70 விமானங்கள் வாங்கவும் ஒப்பந்தத்தில் வழி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாகவும் பேசிய பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும்
இந்தியா- அமெரிக்கா இடையிலான உறவு, புதிய திட்டங்கள், உலகளாவிய பங்களிப்பு குறித்து விவாதித்தனர்.
ஏர் இந்தியா-போயிங் ஒப்பந்தத்தை வரவேற்ற இரு தலைவர்களும், இந்த ஒப்பந்தம், இரு நாடுகளிலும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும்' என்று நம்பிக்கை தெரிவித்தனர்.
இரு நாடுகளுக்கு இடையிலான நல்லுறவுக்கு இந்த ஒப்பந்தம் ஒரு பிரகாசமான முன் உதாரணம் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சிவில் விமான போக்குவரத்துத் துறையில் ஏற்பட்டுள்ள புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வருமாறு போயிங் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களுக்குப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
விண்வெளி, கணினி சில்லு உற்பத்தி தொழில்நுட்பம், விநியோக சங்கிலி ஏற்படுத்துதல், பாதுகாப்புக் கூட்டு உற்பத்தி, புதுமையான சுற்றுச்சூழல் பாதுகாப்பு கொண்ட தொழில்நுட்பங்கள் தொடர்பான துறைகளில் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் இரு தலைவர்களும் உறுதி பூண்டனர்.
இதற்கிடையே அமெரிக்காவுக்கு வருமாறு திரு ஜோ பைடன் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இம்முறை உலகத் தலைவர்கள் பங்கேற்கும் இந்தியாவில் நடைபெறும் 'ஜி-20' மாநாட்டுக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளது.
அதன் பொறுப்புகளை வெற்றி கரமாக கையாள எப்போதும் தொடர்பில் இருப்பது என்று இரு தலைவர்களும் உறுதி தெரிவித்து உள்ளனர்.

