புதுடெல்லி: இந்தியாவில் கடத்தல் தங்கம் சிக்குவது 62.5% அதிகரித்துள்ளது என்று நாடாளு மன்றத்தில் மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
இந்தியாவில் தங்கம் மீதான இறக்குமதி வரி 7.5%லிருந்து 12.5%க்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு சட்ட விரோதமாக தங்கம் கடத்திக் கொண்டு வருவது அதிகரித்து வருகிறது.
கடந்த 2020ஆம் ஆண்டு 2,155 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது என மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்ற மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
இதே போல் 2021ஆம் ஆண்டு 2,383 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியதாகவும் 2022ஆம் ஆண்டு 3,502 கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பங்கஜ் சவுத்ரி தெரிவித்தார்.
கடந்த 2020 முதல் 2022ஆம் ஆண்டு வரை கடத்தல் தங்கம் சிக்குவது 62.5% அதிகரித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் நடப்பாண்டில் ஜனவரி மாதத்தில் மட்டும் 384 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று பங்கஜ் சவுத்ரி தெரிவித்தார்.

