புதுடெல்லி: மேகாலயா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக தலைவர் ஜே.பி. நட்டா வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். அம்மாநிலத்தில் 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இம்மாதம் 27ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் பாஜகவின் வாக்குறுதிகளை ஜெ.பி. நட்டா நேற்று வெளியிட்டார்.
"மேகாலயாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் 7வது ஊதியக் குழு அமல்படுத்தப்படும். பெண் குழந்தை பிறந்தால் ரூ.50,000 மதிப்பிலான பத்திரம் வழங்கப்படும்," என்று அவர் அறிவித்தார்.
மேலும், பெண் குழந்தைகளுக்கு மழலைக் கல்வி முதல் முதுநிலை பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வியும் ஒற்றைத் தாய் மற்றும் கணவனை இழந்த பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ. 24,000 உதவித் தொகையும் வழங்கப்படும் என்று நட்டா தெரிவித்தார். இதற்கு முன்பு காங்கிரஸ் கட்சியும் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில், குடும்பத்தின் தலைவர் பெண்ணாக இருந்தால் மாதம் ரூ.3,000, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, இலவச மருத்துவம் உள்ளிட்ட வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது.
இதற்கிடையே திரிபுரா மாநிலத்தில் 60 தொகுதிகளுக்கும் இன்று ஒரேகட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

