மக்கள் தொகையில் முதல் இடத்துக்கு வரும் இந்தியா
சென்னை: மக்கள் தொகையில் இந்தியா விரைவில் முதல் இடத்தைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படு கிறது. தற்போது இந்தியாவின் மக்கள்தொகை 1.4 பில்லியன் என்று ஒரு கணக்கு தெரிவிக்கிறது. ஆனால் உண்மையான எண்ணிக்கை தெரியவில்லை என்று ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. இதற்குக் காரணம் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அது மட்டுமல்லாமல் 2021ல் கணக்கெடுக்க வேண்டிய மக்கள்தொகையும் கொவிட்-19 கொள்ளைநோய் காரணமாக தாமதமானது.
இனிமேல் எப்போது மக்கள்தொகை கணக்கெடுக்கப் படும் என்ற தகவலும் இல்லை. இதனால் மக்கள் தொகையில் சீனாவையும் விஞ்சி முதல் இடத்துக்கு இந்தியா வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
கேரள முதல்வரின் முன்னாள்
முதன்மைச் செயலாளர் கைது
திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளரும் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான சிவசங்கர், தங்கம் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவில் 'லைப் மிஷன்' அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டுவதற்காக வெளிநாட்டில் இருந்து பண உதவி பெற்றதில் முறை கேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரிடமும் அமலாக்க துறையினர் விசாரணை நடத்தினர். பன்னிரண்டு மணி நேர விசாரணைக்குப் பிறகு அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் நள்ளிரவு சிவசங்கரை கைது செய்தனர்.
அதானிக்கு எதிராக வழக்கு
புதுடெல்லி: அதானி குழுமத்தின் பங்குச் சந்தை மோசடி குறித்து காங்கிரஸ் சார்பில் நேற்று உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடரப்பட்டது. காங்கிரசைச் சேர்ந்த ஜெயா தாக்கூர் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் இந்த மனுவை சமர்பித்தார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. வருகிற 17ஆம் தேதி இந்த மனு மீது விசாரணை நடைபெறுகிறது.

