லத்தூர்: மகாராஷ்டிரா மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள லத்தூரில் பூமிக்கு அடியில் விவரிக்க முடியாத வகையில் சத்தம் கேட்டுள்ளது. ஆனால், நில அதிர்வு எதுவும் பதிவாகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மர்ம ஒலியானது புதன்கிழமை காலை 10.30 முதல் 10.45 மணிக்கு இடையில், விவேகாந்தா சவுக் அருகில் கேட்டுள்ளது. இதனால் நிலநடுக்கம் வந்துவிட்டதாக பரவிய வதந்தியால் பொதுமக்கள் பீதியடைந்தனர். ஆனால், நிலநடுக்கம் ஏதுவும் பதிவாகவில்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.
இதுகுறித்து மாவட்ட பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரி, சாபேப் உஸ்மானி கூறுகையில், "மாரத்வாடா பகுதியில் அவ்வப்போது சில மர்ம ஒலிகள் பதிவாகியுள்ளன என்று தெரிவித்தார்.
முன்னதாக, இந்தாண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி மாவட்டத்தின் நிலங்கா வட்டத்தில் நித்தூர் தங்கவாடி என்னும் சிற்றூர்ப் பகுதிகளில் இதுபோன்ற ஒலி கேட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், லத்தூர் மாவட்டத்தின் ஹசோரி, கில்லாரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதுபோன்ற ஒலி மூன்று முறை கேட்டதாகக் கூறப்படுகிறது. மரத்வாடா வட்டாரத்திலும் அவ்வப்போது இதுபோன்ற ஒலி கேட்கும் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 1993ஆம் ஆண்டில் கில்லாரி பகுதி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பத்தாயிரம் பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

