பாட்னா: சிலருக்குத் தேர்வு என்பதே வலிமிகுந்த விஷயமாக இருக்கலாம். ஆனால், வலியோடு குழந்தையைப் பெற்றெடுத்து, அடுத்த மூன்று மணி நேரத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வெழுதி அனைவரையும் வியக்க வைத்துள்ளார் இந்தியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர்.
ருக்மிணி குமாரி, 22 (படம்), என்ற இப்பெண்ணுக்கு எப்படியாவது படிப்பை முடித்துவிட்டு, நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்பது விருப்பம்.
பீகார் மாநிலம், பாங்கா மாவட்டத்தைச் சேர்ந்த திருவாட்டி ருக்மிணி கடந்த செவ்வாய்க்கிழமை கணிதத் தேர்வை எழுதினார்.
அன்றிரவே இவருக்குப் பிரசவ வலி தொடங்கிவிட்டது. ஆனாலும், மறுநாளும் தேர்வு எழுதுவதில் உறுதியாக இருந்த இவர், மூன்று மணி நேரத்திற்கு முன்னதாகவே தேர்வு மையத்திற்குச் சென்றுவிட்டார்.
பிரசவ வலியோடு தேர்வுக்கூடத்தில் சென்று அமர்ந்துவிட்டார் திருவாட்டி ருக்மிணி. ஆனாலும், பொறுக்க முடியாத அளவிற்கு வலி எடுத்ததால், உடனடியாக அதுபற்றி அதிகாரிகளிடம் சொன்னார்.
அதனைத் தொடர்ந்து, விரைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட இவர், அங்கு நல்ல முறையில் ஆண் குழந்தையை ஈன்றெடுத்தார்.
அதன்பின், தான் எப்படியாவது தேர்வெழுதிவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த திருவாட்டி ருக்மிணி, தம்மைத் தேர்வெழுத அனுமதிக்கும்படி சுகாதாரம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார். திருவாட்டி ருக்மிணியின் வேண்டுகோள் ஏற்கப்படவே, அவர் மீண்டும் தேர்வு மையத்திற்குச் சென்று, அறிவியல் தேர்வை எழுதினார்.
அவசர அழைப்பு வந்ததை அடுத்து, திருவாட்டி ருக்மிணிக்கான மகப்பேற்று அறை தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்ததாக டாக்டர் போலா நாத் கூறினார். துணிச்சலுடன் சென்று தேர்வெழுதிய திருவாட்டி ருக்மிணியைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

