லக்னோ: சிறைவாசம் அனுபவித்து வரும் அப்பாஸ் அன்சாரி என்ற எம்எல்ஏ, தன் மனைவியோடு சிறைக்குள் உல்லாசமாக குடும்பம் நடத்தி வந்தது உறுதி யானதை அடுத்து இம்மாதம் 10ஆம் தேதி அவரது மனைவி கைது செய்யப்பட்டார்.
இவ்வழக்கை காணொளிச் சந்திப்பு மூலம் விசாரித்த லக்னோ நீதிமன்ற சிறப்பு நீதிபதி லோகேஷ் வருண், நேற்று வெள்ளி முதல் மூன்று நாள்களுக்கு எம்எல்ஏவின் மனைவி நிகத் பானுவையும் அவர்களது ஓட்டுநர் நியாஜ் அகமதுவை ஐந்து நாள்களுக்கும் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாரதிய சுஹல்தேவ் சமாஜ்வாதி கட்சியின் எம்எல்ஏவாக இருப்ப வர் அப்பாஸ் அன்சாரி. இவர், பண மோசடி வழக்கில் கடந்த மூன்று மாதங்களாக ரகவுலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறைக் கண்காணிப்பாளர் அசோக் சாகர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எம்எல்ஏ அப்பாஸ் அன்சாரி பெரும்தொகையை லஞ்சமாகக் கொடுத்ததாகவும் அதைப் பெற்றுக்கொண்டு கணவருடன் நிகத் பானுவும் சிறையில் தங்கியிருப்பதற்கு அவர்கள் அனுமதி அளித்த தாகவும் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, காவல் ஆய்வாளர் பிருந்தா சுக்லா, மாவட்ட ஆட்சியர் அபிஷேக் ஆனந்த் நடத்திய திடீர் சோதனையில், அசோக் சாகரின் அலுவலக அறை உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. கதவை உடைத்துப் பார்த்தபோது அப்பாஸ் அன்சாரியும் நிகத் பானுவும் அங்கு இருந்தனர்.
அத்துடன், அப்பாஸ் அன்சாரி தன் கைப்பேசி மூலம் சாட்சிகளை மிரட்டுவது, பணம் பறிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
அவரிடம் இருந்து இரு கைப்பேசிகள், லட்சக்கணக்கில் ரொக்கப் பணம், தங்க நகைகள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
இவ்வழக்குத் தொடர்பாக சிறைக் கண்காணிப்பாளர் அசோக் சாகர் உள்ளிட்ட எட்டுப் பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைக் குப் பின்னர் அவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்றும் சித்ரகுட் காவல் கண்காணிப்பாளர் விருத்த சுக்லா தெரிவித்தார்.

