மின்தூக்கி பழுதாகி நின்றதால் விமானத்தை தவறவிட்ட ஆடவர்
நொய்டா: நொய்டாவில் உள்ள பஞ்சீல் ஹைனிஷ் என்ற பகுதியில் வசிக்கும் அகிலேஷ் குமார் சவுத்ரி, 36, மின்தூக்கியில் ஏறத்தாழ 45 நிமிடங்கள் சிக்கிக் கொண்டதால், ஹைதராபாத்துக்குச் செல்லவேண்டிய விமானப் பயணத்தை அவர் தவறவிட்டார்.
மின்தூக்கி பராமரிப்புத் துறையின் அலட்சியமே இதற்கு காரணம் என பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
"வியாழனன்று மதியம் 11வது மாடியில் இருந்து மின்தூக்கியில் இறங்கியபோது, 5வது மாடியில் மின்தூக்கி எதிர்பாராதவிதமாக பழுதாகி நின்றுவிட்டது. தொலைபேசி இணைப்பு கிடைத்ததும் என் மனைவியிடம் விவரம் கூறினேன். அவர், இன்னும் சில பெண்களுடன் வந்து மின்தூக்கியைத் திறக்க முயன்றார். ஆனால் நீண்டநேரம் வீணாகிவிட்டது," என நீரிழிவு நோயாளியான சவுத்ரி வேதனை தெரிவித்துள்ளார்.
"தங்களுக்கு இச்சம்பவம் பற்றி அறவே தெரியாது," என ைடம்ஸ் ஆப் இந்தியா ஊடகத்தின் அழைப்புக்குப் பதிலளித்த மின்தூக்கி பராமரிப்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.
86.10 விழுக்காடு வாக்குகள் பதிவு
திரிபுரா: திரிபுரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளதாகவும் 86.10% வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் மார்ச் 2ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இருவர் உயிரோடு எரித்துக்கொலை
பிவானி: ஹரியானா மாநிலத்தில் ஜீப் வாகனத்துடன் சேர்த்து இருவர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டடுள்ளனர். ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் நசீர், 27, ஜூனைத் 35. இருவரும் காணாமல் போனதாக உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், ஹரியானா அருகே உள்ள பிவானியில் எரித்துக் கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். ஜூனைத் என்பவர் மாடுகளை இறைச்சிக்காக கடத்தும் வேலையைச் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. குற்றவாளிகளைக் காவலர்கள் தேடி வருகின்றனர்.
உலகில் அதிக வாகன நெரிசல் உள்ள 2ஆம் நகரமாக பெங்களூர்
பெங்களூரு: உலகில் அதிக வாகன நெரிசல் உள்ள நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் சிலிக்கான் வேலி என்றழைக்கப்படும் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு இரண்டாம் இடம் பிடித்துள்ளது. 'ஜியோலொகேஷன்' தொழில்நுட்ப அமைப்பு 56 நாடுகளில் உள்ள 389 நகரங்களில் ஆய்வு மேற்கொண்டதில், இங்கிலாந்தின் தலைநகரான லண்டன் முதலிடத்தையும் டெல்லி 34வது இடத்தையும் மும்பை 47வது இடத்தையும் பிடித்துள்ளன.

