புதுடெல்லி: ராமர் பாலம் தொடர்பான வழக்கை விரைவில் விசாரிப்பதற்கு உச்சநீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது.
இந்தியா-இலங்கை இடையிலான கடல் பகுதியில் இருக்கும் மணல் போன்ற திட்டு ராமர் பாலம் என நம்பப்படு கிறது.
அதனால், சேது சமுத்திரத் திட்டத்தின்போது ராமர் பாலத்தை சேதப்படுத்தாமலும் அதனை தேசியப் பாரம்பரிய நினைவுச்சின்னமாக அறிவிக்கக் கோரியும் கடந்த 2015ல் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி உச்சநீதிமன்றத்தில் பொது நல மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இதுகுறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக உச்சநீதிமன்றத்தில் சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தார் கடந்த ஜனவரி 19ஆம் தேதி தெரிவித்திருந்தார்.
மத்திய அரசின் நடவடிக்கையில் அதிருப்தி ஏற்பட்டால், உச்ச நீதிமன்றத்தை மீண்டும் அணுகலாம் எனவும் சுப்பிரமணிய சுவாமியிடம் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.
இந்நிலையில், ராமர் பாலம் விஷயத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாததால், எனது மனுவை அவசர வழக்காகக் கருதி விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி டி.ஓய்.சந்திரசூட் அமர்வு முன்பு சுப்பிரமணிய சுவாமி தரப்பில் முறையிடப்பட்டது.
அரசியல் சாசன அமர்வு விசாரணைக்குப் பின்னர் சுப்பிரமணிய சுவாமி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவிட்டார்.

