விசாகப்பட்டினம்: ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் வசிக்கும் ஒரு தம்பதி, இறந்துபோன தங்களுடைய குழந்தையை 120 கி.மீட்டர் தூரம் ஸ்கூட்டரில் எடுத்துச் சென்றுள்ளனர்
அவசர வாகனம் வராததால் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட மகேஸ்வரி என்ற பெண்ணுக்கு இம்மாதம் 2ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.
பிறந்தது முதல் சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் குழந்தை பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் அவசர சிகிச்சைப் பிரிவில் குழந்தைக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
சென்ற வெள்ளிக்கிழமை காலை 7.50 மணிக்கு அந்தக் குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டது.
இதனால் விசாகப்பட்டினத்தில் இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தங்களுடைய சொந்த ஊரான பாடேரு அருகில் இருக்கும் குமுடு என்ற கிராமத்திற்கு குழந்தையின் உடலை அவர்கள் ஸ்கூட்டரில் எடுத்துச் சென்றனர்.
உடனடினயாக அவசர வாகனம் கிடைக்கவில்லை. ஆனால் பாடேரு அருகில் சென்றபோது அங்கு வந்த அவசர வாகனம் குழந்தையின் உடலை ஏற்றிக் கொண்டு குமுடு கிராமம் சென்று சேர்ந்தது.
இது குறித்து தகவல் வெளியானதும் பெற்றோரிடம் விசாரணை நடைபெற்றது.
அப்போது, "குழந்தையின் உடலை எடுத்துச் செல்ல அவசர வாகனத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டோம். ஆனால் அவர்கள் ஏற்பாடு செய்யவில்லை," என்று குழந்தையின் பெற்றோர் கூறினர்.
பிறந்து 14 நாட்களே ஆன குழந்தையின் உடலுடன் பெற்றோர் 120 கிலோமீட்டர் ஸ்கூட்டரில் பயணம் செய்த சம்பவம் மாநில அளவில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இதற்கிடையே ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, இந்த விவகாரத்தை விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.

