சென்னை: ஆறு நாள்களில் 25,000 தெருக்களில் கொசு ஒழிப்புப் பணி
சென்னை: கடந்த ஆறு நாள்களில் மட்டும் சென்னையில் உள்ள 25,000 தெருக்களில் கொசு ஒழிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அத்தெருக்களில் மழைநீர் வடிகாலில் தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்றி நீர்நிலைகளுக்கு அனுப்பியதாகவும் ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டு கொசுக்கொல்லி மருந்து தெளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அந்தப் பணிகளில் ஆளில்லா சிறிய வானூர்திகள் பயன்படுத்தப்பட்டதாகவும் மாநகராட்சி கூறியுள்ளது.
பிரபாகரன் உயிருடன் இல்லை என்கிறார் முன்னாள் போராளி
சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கிழக்கு திமோர் நாட்டில் இருப்பதாகவும் அந்த இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் இத்தாலியில் சிகிச்சை பெறுகிறார் என்றும் வெளியான தகவலை அந்த இயக்கத்தைச் சேர்ந்த முன்னாள் போராளிகள் சிலர் மறுத்துள்ளனர். அவர்களில் ஒருவரான அரவிந்தன், பிரபாகரன் தற்போது உயிருடன் இல்லை எனத் தெரிவித்துள்ளார். "நான் எல்லோருக்கும் சொல்லும் கசப்பான உண்மை என்னவெனில், அண்ணன் உயிருடன் இல்லை என்பதுதான். அண்ணன் என்றால் யார் என்பது எல்லோருக்கும் தெரியும்," என்று இறுதிக்கட்டப் போரில் பங்கேற்று சண்டையிட்ட வவுனியாவைச் சேர்ந்த போராளி அரவிந்தன் என்பவர் பிபிசி ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக மேற்கொண்டு எந்தத் தகவலையும் தம்மால் தெரிவிக்க இயலாது என்று அவர் கூறியுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மீனவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது
சேலம்: கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மீனவர் ராஜாவின் உடல் நேற்று காவல்துறை பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, உடற்கூராய்வுக்குப் பின்னர் ராஜாவின் உடலைப் பெற்றுக்கொள்ள அவரது குடும்பத்தாரும் உறவினர்களும் மறுத்தனர். தங்களுக்கு நீதி வேண்டும் என்று குறிப்பிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து, அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் ராஜாவின் உடல் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. இதற்கிடையே, கருணை அடிப்படையில் ராஜாவின் மனைவி பௌனாவிற்கு கொளத்தூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் குழந்தை பராமரிப்புப் பணி வழங்கப்பட்டுள்ளது.

