மும்பை: சிவசேனா கட்சியின் பெயரையும் வில் அம்பு சின்னத்தையும் பெற ஏறக்குறைய ரூ.2,000 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாக இக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் குற்றம்சாட்டியுள்ளார்.
அத்துடன், ஒரு எம்எல்ஏவுக்கு ரூ.40 கோடி வீதம் கொடுக்கப் பட்டுள்ளது எனவும் உத்தவ் தாக்கரே அணியினர் விமர்சித்துள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டுகளை மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தரப்பு மறுத்துள்ளது.
சிவசேனா கட்சி இரண்டாக உடைந்த நிலையில், கட்சியின் பெயர், வில் அம்பு சின்னத்தை ஏக்நாத் ஷிண்டே தரப்பினர் பயன்படுத்திக்கொள்ள தேர்தல் ஆணையம் நான்கு நாள்களுக்கு முன்பு அங்கீகாரம் வழங்கியது.
இந்நிலையில், உத்தவ் தாக்கரே ஆதரவாளரும் எம்பியு மான சஞ்சய் ராவத், "கட்சியின் பெயரும் சின்னமும் ரூ.2,000 கோடிக்கு ஏக்நாத் ஷிண்டேவால் வாங்கப்பட்டுள்ளது. இது 100 விழுக்காடு உண்மை. இது குறித்து விரைவில் ஆதாரத்தை வெளியிட உள்ளேன்," எனத் தெரிவித்துள்ளார்.

