புதுடெல்லி: குஜராத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ரயில் எரிப்புச் சம்பவம் தொடர்பில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் குஜராத் அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
கடந்த 2002ல் ராமபக்தர்களுடன் சென்றுகொண்டிருந்த சபர்மதி விரைவு ரயிலுக்கு கும்பல் ஒன்று தீவைத்தது. குஜராத்தின் கோத்ரா ரயில் நிலையத்தில் நடந்த இந்தச் சம்பவத்தில் 59 பேர் கருகி உயிரிழந்தனர்.
இதையடுத்து, 11 பேருக்குத் தூக்குத் தண்டனை, 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இத்தூக்குத் தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றம், அதனை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டது.
இதனிடையே, பிணை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் பலர் தாக்கல் செய்துள்ள மனுக்கள், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது குஜராத் அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா முன்னிலையாகி வாதிட்டபோது, "பெண்கள், குழந்தைகள் உட்பட 59 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட கொடூரமான வழக்கு இது. ரயில் வெளியில் இருந்து பூட்டப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது.
"11 குற்றவாளிகளின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியதை எதிர்த்து குஜராத் அரசு மேல்முறையீடு செய்துள்ளது. ரயில் பெட்டியை வெளியில் இருந்து பூட்டி, தீவைத்து அதன் மீது கற்களை வீசினால் அது கல்லெறிதல் சம்பவம் ஆகி விடாது," என்றார்.
இவ்வழக்கை மூன்று வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

