புதுடெல்லி: இந்தியாவில் கடந்த இரண்டு நாள்களில் மட்டும் நூறு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் ரூ. 74 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணமும் சிக்கியுள்ளது.
பாட்னா, புனே மற்றும் மும்பை ஆகிய இடங்களில் வெவ்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தி கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்திய வருவாய் புலனாய்வு இயக்குனரகத்தின் அதிகாரிகள், கடந்த 19ஆம் தேதி இரவு மும்பைக்கு வரவிருந்த சூடான் நாட்டவர்களை பாட்னா ரயில் நிலையத்தில் மடக்கிப் பிடித்தனர்.
அவர்களிடமிருந்து 40 பொட்டலங்களில் இருந்த 37.126 கிலோ எடையுள்ள தங்கம் மீட்கப்பட்டது.
சென்ற திங்கட்கிழமை ஐதராபாத்தில் இருந்து மும்பைக்கு பேருந்தில் சென்ற இரண்டு சூடான் நாட்டு பெண்களை புனேயில் தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது, 5.615 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது. அதே நாள் பாட்னாவிலிருந்து மும்பைக்குப் பயணம் செய்த இரண்டு சூடான் நபர்கள் மும்பை ரயில் நிலையத்தில் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து 40 பாக்கெட்டுகளில் 38.76 கிலோ தங்கம் மீட்கப்பட்டது. மேலும் 20.2 கிலோ கடத்தல் தங்கம் மற்றும் ரூ.74 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணம், ரூ.63 லட்சம் இந்திய பணம் மும்பையில் பிடிபட்டது. இதில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். மொத்தம் ரூ.51 கோடி மதிப்புள்ள சுமார் 101.7 கிலோ தங்கமும் ரூ.74 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணமும் ரூ.63 லட்சம் இந்திய பணமும் கைப்பற்றப்பட்டன. இதுவரை ஏழு சூடான் நாட்டவர், மூன்று இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

