புதுடெல்லி: எதிர்க்கட்சிகளை உளவு பார்த்த குற்றச்சாட்டுகள் உறுதியானதை அடுத்து, டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோ டியா (படம்) மீது புதிய வழக்குப் பதிய சிபிஐ அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சு அனுமதி அளித்துள்ளது.
ஆனால், அவர் மீது தொடுக் கப்பட்டுள்ள இரண்டு வழக்கு களும் பொய்யானவை என ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது. எனினும், இவ்வழக்குகளால் மணிஷ் சிசோடியா கைதாகும் சூழல் நெருங்கியுள்ளதாக பாஜகவினர் கோடி காட்டுகின்றனர்.
டெல்லி மதுபானக் கொள்கையை அமல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்தது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணையின் பிடியில் ஆம் ஆத்மியின் மூத்த தலைவரான மணிஷ் சிசோடியா சிக்கியுள்ளார்.
இதுகுறித்த விசாரணைக்கு நாளை மறுநாள் 26ஆம் தேதி அவர் சிபிஐ அதிகாரிகள் முன்பு முன்னிலையாக உள்ளார்.
இந்தச் சூழலில், மணிஷ் சிசோ டியா இப்போது மற்றொரு புதிய வழக்கில் சிக்கியுள்ளார்.
கடந்த 2015ல் 'ஃபீட்பேக் யூனிட் (எஃப்.பி.யு)' என்ற அமைப்பை டெல்லி அரசு அமைத்தது. டெல்லியில் நடைபெறும் ஊழல்கள் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அப்போது மணிஷ் சிசோடியா அறிவித்திருந்த நிலையில், அதுபோன்று எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆம் ஆத்மியின் அரசியல் ஆதாயத்திற்காக பல்வேறு முக்கியப் பிரமுகர்கள், அதிகாரிகள், அலுவலர்களை உளவு பார்த்து எஃப்.பி.யு அமைப்பு தகவல்களை சேகரித்துள்ளதாகப் புகார்கள் கிளம்பின. இதையடுத்து, சிபிஐ நடத்திய விசாரணையில் முழுமையான விதிமீறல்கள் நடந்துள்ளதாக உள்துறை அமைச்சிடம் சிபிஐ அறிக்கை சமர்ப்பித்தது.
இந்நிலையில், மணிஷ் சிசோடியா மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த சிபிஐக்கு மத்திய உள்துறை அமைச்சு அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து மணிஷ் சிசோ டியா தனது டுவிட்டர் பதிவில், "எதிரிகள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்வது என்பது ஒரு பலவீனமான, கோழைத்தனமான செயல். ஆம் ஆத்மியின் வளர்ச்சி பொறுக்காமல் மேலும் பல வழக்குகள் எங்கள் மீது பதிவாகும். அவற்றை நாங்கள் வெற்றிகரமாக எதிர்கொள்வோம்," எனக் கூறியுள்ளார்.

