உக்ரேனில் 2,500; ரஷ்யா, செர்பியா, உஸ்பெகிஸ்தானில் 4,000 பேர்
புதுடெல்லி: உக்ரேன், ரஷ்யா இடையே நீடித்து வரும் போர் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இந்திய மருத்துவ மாணவர்கள் தற்போது பிற நாடுகளில் உள்ள கல்லூரிகளில் தங்களுடைய படிப்பைத் தொடர்கின்றனர்.
ரஷ்யா, செர்பியா, உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இந்திய மாணவர்கள் சேர்ந்துள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா வீசிய முதல் குண்டு உக்ரேன் மண்ணில் விழுந்த அந்நாள் முதல் இந்திய மாணவர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகி வருகின்றனர்.
உக்ரேனில் ஏறத்தாழ 17 ஆயிரம் இந்திய மாணவர்கள் அங்குள்ள மருத்துவக் கல்லூரிகளில் படித்து வந்தனர். போர் மூண்டதும் அவர்கள் அனைவரும் இந்திய அரசால் பத்திரமாக தாயகம் மீட்கப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இதனால் மாணவர்களின் படிப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மருத்துப் படிப்பை மேற்கொண்டுள்ள மாணவர்கள் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
மீண்டும் உக்ரேன் செல்வது பாதுகாப்பாக இருக்காது என்று கருதும் மாணவர்கள் இப்போது ரஷ்யா, செர்பியா, உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட வேறு சில நாடுகளில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து படித்து வருகின்றனர்.
இந்திய மாணவர்களுக்கு ரஷ்யாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாகவும் எஞ்சியுள்ள மருத்துவப் படிப்பை முடிக்க இயலும் என்று நம்புவதாகவும் சொல்கிறார் ரஷ்யாவின், நார்த்தர்ன் ஸ்டேட் மருத்துவ பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ள 25 வயதான கேரள மாணவி ஜிஸ்னா.
உக்ரேனுக்குச் செல்ல தயங்கிய சுமார் நான்காயிரம் மாணவர்கள் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று மருத்துவப் படிப்பை மேற்கொள்ள இடமாறுதல் அனுமதி பெற்றிருப்பதாக உக்ரேன் இந்திய மருத்துவ மாணவர்களின் பெற்றோர் சங்கத் தலைவர் ஆர்.பி.குப்தா தெரிவித்துள்ளார்.
எனினும், 2,500 மாணவர்கள் மீண்டும் உக்ரேனுக்குச் சென்று அங்கு மருத்துவப் படிப்பை தொடர்வதாகவும் அவர் மேலும் கூறி உள்ளார்.

