லக்னோ: உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த முகம்மது ஆரிப் என்ற ஆடவர் ெசல்லும் இடங்களுக் கெல்லாம் கடந்த ஓராண்டு காலமாக நாரை பறவை ஒன்றும் பறந்து நட்பு பாராட்டி வருகிறது. இதனை மக்கள் பலரும் வியந்து பார்த்து வருகின்றனர்.
அமேதி மாவட்டத்தைச் சேர்ந்தவரான ஆரிப், கடந்த ஆண்டு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, வாகனத்தில் அடிபட்டு இந்த நாரை சாலையோரமாக உயிருக்குப் போராடிக்கொண்டு இருந்துள்ளது.
உடனே ஆரிப் அதனை மீட்டு அதற்கு மருத்துவ சிகிச்சை அளித்து அதனை வீட்டிற்கு எடுத்துச் சென்றார். நாரையின் கால்கள் குணமாகும் வரை அதை தன் வீட்டிலேயே வைத்து உணவளித்தவர், குணம் அடைந்தவுடன் அதை வெளியில் பறக்கவிட்டார். ஆனால், அது எங்கும் பறந்து செல்ல விரும்பாமல் ஆரிப்புடனேயே தங்கிவிட்டது.
ஆரிப்பின் வீட்டில் அவரது மனைவி, இரு குழந்தைகள், பெற்றோருடன் அந்த நாரையும் ஒரு குடும்ப உறுப்பினராக வசித்து வருகிறது.
அத்துடன், சாலைகள், வயல்வெளி, வீடு என ஆரிப் மோட்டார் சைக்கிளில் செல்லும் இடங்களுக்கு எல்லாம் நாரையும் அவரை நிழல்போல் தொடர் கிறது. இந்தக் காணொளி இணையத்தில் பரவி வருகிறது.

