ஹைதராபாத்: ஹைதராபாத்தில் 24 கேரட் தங்கக் காகிதத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் தோசை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியர்களின் தங்க நகை மோகம் இந்தத் தங்கத் தோசையைச் சாப்பிடுவதிலும் வெளிப்பட்டுள்ளதாகவும் இதனைச் சாப்பிட ஹைதராபாத் மக்கள் பலரும் ஆர்வம் காட்டி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் 'ஹவுஸ் ஆஃப் தோசாஸ்' என்ற உணவகத்தில் தான் தங்கத் தோசை விற்ப னைக்கு வந்துள்ளது. தோசை வார்த்தபின் அதில் சுத்தமான 24 காரட் தங்கக் காகிதத்தை ஒட்டி, அது பறந்துவிடாமல் இருக்க அதன் மேல் நெய் ஊற்றுகின்றனர். இதனால்தான் இந்த தோசை ரூ.1,000க்கு விற்கப்படுகிறது.
ஆயினும், இதனைச் சாப்பிட குடும்பம் குடும்பமாக வருகின்ற னர். அதிலும் வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகம்.
இந்தத் தங்கத் தோசையுடன் நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம் பருப்பு, நெய், விதவிதமான சட்னிகள், காரப்பொடிகள் என ஒன்பது வகையான பதார்த்தங் களும் பரிமாறப்படுகின்றன.
'டபுள்டக்கர் பீட்சா' தோசை ரூ.300, பீட்சா தோசை ரூ.150, உலர் பழங்கள் தோசை ரூ.170, 'ரெட் சில்லி' தோசை ரூ.70 என விதவிதமான தோசைகளும் இங்கு விற்கப்படுகின்றன.

