புதுடெல்லி: தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா மாபெரும் வளர்ச்சி அடைந்து வருவதாக ஜெர்மன் பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஓலாஃப் ஸ்கோல்ஸ், டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார். நான்காவது முறையாக இரு பிரதமர்களும் சந்தித்துக் கொண்டனர்.
பொருளாதார ஒத்துழைப்பு, பாதுகாப்புத் துறையில் மேலும் இணைந்து செயல்படுவது குறித்து இருநாட்டுத் தலைவர்களும் ஆலோசனை மேற்கொண்டனர்.
பின்னர் கூட்டாகச் செய்தி யாளர்களைச் சந்தித்து இரு நாட்டுப் பிரதமர்களும் பேசினர்.
அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஓலாஃப் ஸ்கோல்ஸ்சுடன் உள்நாட்டு, அனைத்துலக விவகாரங்கள் குறித்து ஆலோசித்ததாகக் கூறினார்.
'இந்தியாவில் தயாரிப்போம் திட்டம்', 'சுய சார்பு இந்தியா திட்டம்' ஆகியவற்றிற்கு ஜெர்மனி முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என கேட்டுக்கொண் டதாகவும் பிரதமர் கூறினார்.
இந்தியா-ஜெர்மனிக்கான உறவு ஆழமான புரிதலைக் கொண்டது என்றும் வர்த்தகப் பரிமாற்ற வரலாற்றைக் கொண்டது என்றும் உக்ரேன் பிரச்சினை களுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண இந்தியா தயாராக உள்ளது என்றும் பிரதமர் மோடி கூறினார்.
பின்னர் பேசிய ஜெர்மனி பிரதமர், "தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. திறமைமிக்க இந்திய இளைஞர்களை ஜெர்மனி நிறுவனங்கள் பணியில் சேர்த்துக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றன," எனக் கூறினார்.
ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமைத்துவம் ஏற்றுள்ள நிலையில், ெஜர்மனி அனைத்து நடவடிக்கைகளிலும் முழு ஆதரவை வழங்கும் என்று ஓலாஃப் ஸ்கோல்ஸ் கூறினார்.

