புதுடெல்லி: புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.
அவரது வருகையால் சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு வெளியே ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் போராட்டம் நடத்த வாய்ப்பிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்ததை அடுத்து, அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
முன்னதாக மத்திய பாஜகவை கடுமையாக விமர்சித்த மணீஷ் சிசோடியா, "நான் குறைந்தது ஏழெட்டு மாத காலம் சிறையில் இருக்கவேண்டிய சூழல் வரலாம். அதற்காக யாரும் வருத்தப்படாதீர்கள். மாறாக பெருமைப்பட்டுக் கொள்ளுங்கள்.
"ஏனெனில், நமது பிரதமர் நரேந்திர மோடி, அரவிந்த் கெஜ்ரி வாலைக் கண்டால் பயப்படுகிறார். அதனால்தான் என்னை பொய் வழக்கில் சிக்க வைக்க விரும்புகிறார். இந்த வழக்கில் எனக்கு உறுதுணையாக இருந்து வந்த என் மனைவி தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள அவரைக் கவனித்துக்கொள்ளுங்கள். டெல்லி குழந்தைகள் அனைவரும் நன்றாகப் படியுங்கள். பெற்றோர் சொல்வதைக் கேட்டு நடந்து கொள்ளுங்கள்,'' என உருக்கமாகக் கூறினார்.
கடந்த 2021-22ஆம் ஆண்டில் ஆம் ஆத்மி அரசு அறிமுகப்படுத்திய புதிய மதுபானக் கொள்கையில் மிகப்பெரிய அளவில் அக்கட்சியின் தலைவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
மதுபான வியாபாரிகளில் சிலருக்கு மட்டும் மதுபானக் கொள்கைகளைத் தளர்த்தி, உரிமங்கள் வழங்கி, சலுகைகளை ஆம்ஆத்மி தலைவர்கள் அளித்ததாகவும் இதன்மூலம் ரூ.100 கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாகவும் கூறப்பட்டது.
இவ்வழக்கில் மணிஷ் சிசோடியா கைது செய்யப்படலாம் என முன்னதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் "கடவுள் உன்னுடன் இருக்கிறார் மணீஷ். லட்சக்கணக்கான குழந்தைகள், பெற்றோரின் ஆசி உங்களுடன் உள்ளன. நாட்டிற்காகவும் சமூகத்திற்காகவும் சிறைக்குச் செல்வது சாபமல்ல, பெருமை," என குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் சிபிஐ விசாரணைக்குச் செல்கிறேன். ஏழெட்டு மாதங்கள் சிறையில் இருந்தாலும் கவலையில்லை. நான் பகத்சிங்கை பின்பற்றுபவன், சிறை செல்வதற்கு எல்லாம் அஞ்சமாட்டேன். கோடிக்கணக்கான மக்கள் என் பக்கம் உள்ளனர்.
டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா

