புதுடெல்லி: பாஜகவை வீழ்த்த ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் இணைந்து செயல்படத் தயார் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது அணி உருவானால் அது பாஜகவுக்கே சாதகமாக அமையும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
சட்டீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் கடந்த மூன்று நாள்களாக நடைபெற்று வரும் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாட்டில், கட்சியின் மூத்த தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ஒரு சில முதலாளிகளின் நலனுக்காக நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளத்தையும் பிரதமர் மோடியும் பாஜக அரசும் பாழ்படுத்தி வருவதாக குற்றம்சாட்டினார்.
ராகுல் காந்தி நடத்திய நாடு தழுவிய 'பாரத் ஜோடோ' யாத்திரை காங்கிரஸ் கட்சிக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் எனக் கூறிய அவர், இந்த யாத்திரையுடன் தான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பாஜக அரசால் நாட்டின் ஜனநாயகமும் அரசியல் சாசனமும் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருப்பதாக விமர்சித்தார்.
நேற்றுடன் முடிவுற்ற மாநாட்டில் காங்கிரஸ் கட்சிக்குள் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள், ஒன்பது மாநிலத் தேர்தல்கள், நாடாளுமன்றத் தேர்தல் அகியவற்றில் கூட்டணி வைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல்கள் கூறின.
நாட்டின் அனைத்து நிா்வாக அமைப்புகளையும் பாஜக கைப்பற்றியுள்ளதாக சோனியா காந்தி குற்றம்சாட்டியதை அடுத்து, அவரது இந்தக் கருத்துகள் நிா்வாக அமைப்புகளின் தன்னாட்சி, அதிகாரங்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் உண்மைத் தன்மை இல்லாமல் பேசுகிறார் என்றும் பாஜக மூத்த தலைவா் ரவிசங்கா் பிரசாத் சாடியுள்ளார்.

