சுற்றுலாத்துறையை ஊக்குவித்தால் வேலைவாய்ப்பு உயரும்
சிலிகுரி: சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதால் நாட்டில் வேலை வாய்ப்புகள் பெருகும், அதன் மூலம் பொருளாதாரமும் வளர்ச்சி அடையும் என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம், சிலிகுரியில் 80 பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேலான மாணவர்களிடம் உரையாற்றிய அவர், சிறார்கள்தான் நாட்டின் நம்பிக்கை என்றும் அவர்கள் தங்களது கனவுகளையும் நம்பிக்கையையும் நிறைவேற்றும் ஆற்றல் பெற்றவர்கள் என்றும் கூறினார்.
உலக புத்தகக் கண்காட்சி தொடக்கம்
புதுடெல்லி: டெல்லியிலுள்ள பிரகதி மைதான் அரங்கில் தொடங்கியுள்ள உலகப் புத்தகக் கண்காட்சி மார்ச் 5ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் பள்ளி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கு அனுமதி இலவசம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓலைக் கூடையில் திருப்பதி லட்டு
திருமலை: திருப்பதியில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் வகையில் ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தை பனை ஓலைக் கூடையில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக செயல் அதிகாரி தர்மா கூறியுள்ளார். ஏற்கெனவே இங்கு பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெயா் மாற்ற மத்திய அரசு ஒப்புதல்
புனே: மகாராஷ்டிர மாநிலத்தின் ஔரங்காபாத், உஸ்மானாபாத் ஆகிய இரு நகரங்களின் பெயரை சத்ரபதி சம்பாஜி நகா், தாராஷிவ் என பெயர் மாற்றம் செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அம்மாநிலத் துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

