புதுடெல்லி: டெல்லி துணை முதல்வரும் நிதி அமைச்சருமான மணீஷ் சிசோடியாவை எட்டு மணி நேர விசாரணைக்குப் பிறகு மத்தியப் புலனாய்வுத் துறை (சிபிஐ) காவலர்கள் கைது செய்தனர்.
இந்தக் கைது நடவடிக்கையைக் கண்டித்து ஆங்காங்கே உருவ பொம்மைகளை எரித்தும் பாஜகவுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டும் நேற்று நாடு தழுவிய அளவில் ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சிசோடியாவின் கைது நட வடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், "ஆதாரங்கள் எதுவும் இல்லாத நிலையில், அரசியல் அழுத்தம் காரணமாக மணீஷை கைது செய்ய சிபிஐ அதிகாரிகள் நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர்," என்று தெரிவித்தார்.
பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானும் கெஜ்ரிவாலும் செய்தியாளர்களிடம் பேசியபோது, "இது இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு நாள்," என்று கூறினர்.
ஏழைக் குழந்தைகளுக்குத் தரமான கல்வி கிடைக்க பாடுபட்டவரை, தேசத்தின் மீது அக்கறை உள்ளவரை பாஜக அரசு கைது செய்திருப்பதை மக்கள் கவனித்துக்கொண்டிருப்பதாக கெஜ்ரிவால் கூறினார்.
இதனிடையே, இதுபற்றி டுவிட் செய்துள்ள பாஜக நிர்வாகி கபில் மிஸ்ரா, "கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் கைது செய்யப்படுவார்கள் என்று ஆரம்பம் முதலே நான் கூறிவந்தேன். இப்போது சத்யேந்தர் ஜெயினும் மணீஷ் சிசோடியாவும் கைது செய்யப்பட்டுவிட்டனர். அடுத்தது கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார்," என்று குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியில் ஆம் ஆத்மி அரசு கடந்த 2021ல் புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது.
இதையடுத்து 800க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது.
அதில் முறைகேடுகள் நடந்த தாகப் புகார் எழுந்ததால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக சிபிஐ தலைமையகத்தில் முன்னிலையான மணீஷ் சிசோடியாவிடம் புதிய மதுபானக் கொள்கை, குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுடன் உள்ள தொடர்பு, தொலைபேசித் தகவல் பரிமாற்றங்கள் குறித்து அதிகாரிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் அளித்த பதிலில் திருப்தி இல்லை என்றும் முக்கிய கேள்விகளுக்கு தெளி வான பதிலைக் கூறவில்லை என்றும் கூறி அவரைக் கைது செய்தனர். டெல்லி அரசு வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்யவுள்ள நிலையில், அதன் நிதி அமைச்சர் மணிஷ் சிசோ டியாவை சிபிஐ கைது செய்திருப்பது அரசியல் அரங்கில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

