ஷிவமொக்கா: அனைத்துலக அளவில் வேகமாக முன்னேறி வரும் இந்தியாவுக்கு நூற்றுக்கணக்கான விமான நிலையங்கள், ஆயிரக்கணக்கான விமானங்கள் தேவைப்படுகின்றன.
இந்தச் சவாலைச் சமாளிக்கும் வகையில், இந்தியாவின் தயாரிப்பாக பயணிகள் விமானம் உருவாகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
450 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட நவீன கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்தை கர்நாடக மாநிலம், ஷிவமொக்காவில் திறந்துவைத்து பேசிய அவர், வரும் நாள்களில் இந்தியாவிற்கு ஆயிரக்கணக்கான விமானங்கள் தேவைப்படும் என்றும் 'மேட் இன் இந்தியா' விமானங்கள் தயாரிக்கப்படுவது விரைவில் சாத்தியமாகும் என்றும் கூறினார்.
"வரும் 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாறவேண்டும் என்ற இலக்கை இந்தியா அடைய தொழில்நுட்பப் பயன் பாடு பெரிதும் உதவும்
"இந்தியா தற்போது விமானங்களை இறக்குமதி செய்து வருகிறது. ஆனால் சாதாரண குடிமக்களும் 'மேட் இன் இந்தியா' பயணிகள் விமானங்களில் பறக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. 'ஹவாய்' காலணி அணிந்தவர்களும் அதிநவீன விமானத்தில் பறக்கவேண்டும். அதுபோன்ற சூழலை இப்போதே நான் மகிழ்ச்சியோடு பார்த்துக்கொண்டிருக்கிறேன்," என்று பிரதமர் மோடி பேசினார்.

