நொய்டா: உஸ்பெகிஸ்தான் நாட்டில் இருமல் மருந்து குடித்த 18 குழந்தைகள் உயிரிழந்த விவ காரம் தொடர்பில், உத்தரப்பிர தேசத்தில் செயல்பட்டு வந்த இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் மூன்று ஊழியர்கள், இரண்டு இயக்குநர்களைக் நொய்டா காவ லர்கள் கைது செய்தனர்.
ஜெயா ஜெயின், சச்சினி ஜெயின் ஆகிய இரு இயக்கு நர்கள் மீதும் மருந்து தயாரிப்பில் முறைகேடு, மருந்துகளை மாற்றி விற்பனை செய்தது தொடர்பில் வழக்குப் பதிவாகி உள்ளது.
இந்தியாவின் 'மேரியன் பயோடெக்' நிறுவனத் தயாரிப்பான 'டோக்-1 மேக்ஸ்' என்ற இருமல் மருந்தை எடுத்துக்கொண்ட உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 18 குழந்தைகள் இறந்ததாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு கடந்தாண்டு குற்றம்சாட்டியது.
அத்துடன், அந்த மருந்துகளை ஆய்வு செய்ததில் 'எத்திலீன் கிளைக்கோல்' ரசாயனம் அதிகம் இருப்பது தெரியவந்தது.
இந்நிலையில், ஐவரை நொய்டா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதனிடையே, மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆறு இருமல் மருந்து உற்பத்தி நிறுவனங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில உணவு, மருந்து நிர்வாகத்துறை அமைச்சர் சஞ்சய் ரத்தோட் தெரிவித்துள்ளார்.
தங்கள் மாநிலத்தில் இருமல் மருந்து தயாரித்து வரும் 108 நிறுவனங்களில் 84ல் ஆய்வு மேற்கொண்டதாகவும் அவற்றில் ஆறு நிறுவனங்களின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சஞ்சய் கூறியுள்ளார்.
இந்நிலையில், ஏற்கெனவே ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இந்திய இருமல் மருந்தால் 66 குழந்தைகள் உயிரிழந்ததாக கடந்த அக்டோபரில் சா்ச்சை எழுந்தது.
இந்த மரணம் தொடர்பாக, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து குறித்து அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு, தடுப்பு மையங்கள் (சிடிசி), காம்பியன் சுகாதார அதிகாரிகளால் கூட்டு ஆய்வு நடத்தப்பட்டது. விசாரணை அறிக்கையின்படி, காம்பியாவில் குழந்தைகள் இறப்புக்கும் தரமற்ற இருமல் மருந்துக்கும் முக்கிய தொடர்பு இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
காம்பியாவில் இறக்குமதியான டைதிலீன் கிளைக்கோல் அல்லது எத்திலீன் கிளைக்கோல் கொண்ட மருந்துகளால் குழந்தைகளிடையே கடுமையான சிறுநீரகப் பாதிப்புக்கு வழிவகுத்ததாகவும் பிடிஐ ஊடகத் தகவல் குறிப்பிட்டுள்ளது.

