அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் தன்னிப்பூர் பள்ளிவாசலைக் கட்டுவதற்கு இறுதி ஒப்புதல் கிடைத்துள்ளது.
'பாபர் மசூதி-ராம ஜென்ம பூமி' குறித்த தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டதற்கு ஏற்ப இந்த பள்ளிவாசலைக் கட்ட, அயோத்தியா மேம்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்து இருக்கிறது.
மாநில அரசாங்கம் வழங்கும் ஐந்து ஏக்கர் நிலத்தில் பள்ளிவாசல், மருத்துவமனை, ஆய்வுக் கழகம், சமூக அளவிலான சமையலறை, நூலகம் ஆகியவை கட்டப்படும். இந்தோ-இஸ்லாமியக் கலாசார அறநிறுவனம் (ஐஐசிஎஃப்) இந்தப் பணியை மேற்கொள்ளும்.
ஆணையத்தின் அனுமதி கிடைக்காததால், ஈராண்டுகளுக்கு மேலாக இந்தக் கட்டுமானப் பணி தொடங்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், "தன்னிப்பூர் பள்ளிவாசல் கட்டுமானத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளோம். அனுமதிக்கப்பட்ட வரைபடங்கள் உள்ளிட்டவை துறை ரீதியான நடவடிக்கைகளுக்குப் பிறகு ஐஐசிஎஃப் வசம் ஒப்படைக்கப்படும்," என்று அயோத்தியா மண்டல ஆணையர் கௌரவ் தயாள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஆணையத்தின் இறுதி ஒப்புதலுக்குப் பிறகு அறநிறுவனம் ஒரு கூட்டத்தை நடத்தும் என்றும் அதில் பள்ளிவாசலின் கட்டுமானத்துக்கான இறுதி வரைபடம் தீர்மானிக்கப்படும் என்றும் ஐஐசிஎஃப் தெரிவித்தது.
தன்னிப்பூர் பள்ளிவாசல், அயோத்தி ராமர் கோயிலில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும்.
அயோத்தியில் முன்பு இருந்த பாபர் மசூதியைவிட அது அளவில் பெரிதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயிலைக் கட்டவும் மாநில அரசு வழங்கும் இடத்தில் பள்ளிவாசலைக் கட்டும்படியும் 2019ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது.

