பொருளியல் நிபுணர்கள்: வருமான விநியோகத்தில் உள்ள சீரற்ற நிலை பெரும் சவால்
புதுடெல்லி: இந்தியாவில் தனி நபர் வருமானம் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. எனினும், வருமான விநியோகத்தில் சீரற்ற நிலை நிலவி வருகிறது என்றும் அரசாங்கத்துக்கு இது சவாலாக நீடித்து வருகிறது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர் தனி நபர் ஆண்டு வருமானம், ரூ.172,000ஆக அதிகரித்துள்ளது என நிபுணர்களை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி முகைமை செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 2014-15 நிதியாண்டுக் காலத்தில் தனி நபர் வருமானம், ரூ.86,647ஆக இருந்த நிலையில், 2022-23ஆம் ஆண்டில் அது ரூ.172,000ஆக அதிகரித்துள்ளதாக தேசிய புள்ளி விவர அலுவலகத் தரவுகள் தெரிவிக்கின்றன. இது சுமார் 99 விழுக்காடு வளர்ச்சியாகும்.
எனினும், பண வீக்கத்தை கவனத்தில் கொள்ளும்போது, தனி நபர் வருமானம் ஏறக்குறைய 35 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது.
அதாவது, 2014-15 நிதியாண்டில் ரூ.72,805ஆக இருந்த வருமானம், இப்போது ரூ.98,118ஆக உள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையிலான புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, வருமானம் உயர்ந்துள்ளது என்றும் பணவீக்க அடிப்படையில் கணக்கிடும்போது வருமான அளவு மேலும் குறையக்கூடும் என்றும் சொல்கிறார் பொருளியல் நிபுணரான ஜயாத்தி கோஷ்.
மேலும், வருமானப் பகிர்வு என்பது மிக முக்கியமான அம்சம் என்றும் அவர் சுட்டிக்காட்டு
கிறார்.
"நாட்டின் மக்கள்தொகை அடிப்படையில், மேல்தட்டில் உள்ள பத்து விழுக்காட்டினரின் வருமானம்தான் நன்கு அதிகரித்துள்ளது.
அதற்கு நேர்மாறாக, மற்ற பிரிவினரின் சராசரி வருமானம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
"உண்மை நிலவர அடிப்படையில் பார்க்கும்போது, இந்த வருமான வீழ்ச்சியானது, மேலும் அதிகமாக இருக்கக்கூடும்," என்று முன்னாள் பேராசிரியரான ஜயாத்தி கூறுகிறார்.
கொரோனா நெருக்கடி காலத்தில் தனி நபர் வருமானம் வீழ்ச்சி கண்டது என்றபோதிலும், 2021-22 மற்றும் 2022-23க்கான நிதியாண்டுகளில் வருமானம் அதிகரித்துள்ளது என்று சுட்டிக்காட்டுகிறார் தேசிய பொருளியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான பினாக்கி சக்ரபோர்தி.
கடந்த 2014-19 வரையிலான காலகட்டத்தில் தனி நபர் வருமானம், சராசரியாக 5.6 விழுக்காடு அதிகரித்து வந்ததாக அவர் கூறுகிறார்.
"இந்த வளர்ச்சி குறிப்பிடத்தக்கது. சுகாதாரம், கல்வி, பொருளாதாரம், சமூக மேம்பாடு உள்ளிட்ட அம்சங்களில் முன்னேற்றம் காணப்படுகிறது.
"கொரோனா தொற்றுப்பரவலின் தாக்கம் மிக மோசமாக இருந்தபோதிலும், நாட்டின் பொருளாதாரம் குறிப்பிட்ட வளர்ச்சியைக் கண்டுள்ளது.
தகுந்த மறுபகிர்வுக் கொள்கைகளை வகுப்பதுடன், தனிநபர் வருமான வளர்ச்சியை ஆண்டுக்கு ஐந்து முதல் ஆறு விழுக்காடு வரை நிலைநிறுத்துவது பொருளியல் வளர்ச்சியைத் தக்கவைக்க உதவும்," என்கிறார் பினாக்கி சக்ரபோர்தி.