திருப்பதி: தெலுங்கானாவில் கூடுதல் வர தட்சணை கேட்ட மணமகள், கிடைக்காததால் திருமணத்தை நிறுத்திவிட்டார். ஐதராபாத்தை அடுத்துள்ள போச்சாரம் பகுதியைச் சேர்ந்த வாலிபருக்கும் அஸ்வரா பேட்டை பழங்குடியினத்தைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
பழங்குடியினர் வழக்கப்படி தங்கள் வீட்டிற்கு வரும் மருமகளுக்கு மணமகன் வீட்டார் வரதட்சணை கொடுக்க வேண்டும் என்பது வழக்கம். அதன்படி மணமகளுக்கு மாப்பிள்ளை வீட்டார் ரூ.2 லட்சம் வரதட்சணையாகக் கொடுத்தனர். சென்ற வெள்ளிக் கிழமை மணமகன் திருமண உடையில் மணமேடைக்கு வந்தார். ஆனால் மணமகள் வீட்டார் யாரும் திருமண மண்டபத்திற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகன் வீட்டார் மணமகள் தங்கி இருந்த ஹோட்டலுக்கு சென்று திருமண மண்டபத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். அப்போது, கூடுதல் வரதட்சணை கொடுத்தால் மட்டுமே திருமண மண்டபத்திற்கு வர முடியும் என பிடிவாதமாக மணமகள் தெரிவித்தார். இதனால் திருமணம் நின்றது. இதையடுத்து மணமகளுக்குக் கொடுக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சத்தை மணமகன் வீட்டார் கேட்டு வாங்கிச் சென்று விட்டனர்.

