புதுடெல்லி: வண்ணச் சாயங்களையும் வண்ண வண்ண தூள் களையும் ஒருவர் மீது ஒருவர் பூசி, வீசி கொண்டாடப்படும் ஹோலி பண்டிகையின்போது சில இளையர்கள் அத்துமீறி நடந்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் சிறுவன் உட்பட மூவர் கைதாகியுள்ளனர்.
அண்மையில் ஹோலி பண்டிகை வெகுவிமரிசையாகக் கொண்டப்பட்டது. அப்போது, வண்ணப்பொடிகளைத் தூவியும், வண்ணம் கலந்த தண்ணீரை பிறர் மீது தெளித்தும் பலர் உற்சாகமாக தங்களுடைய ஹோலி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.
இந்தியாவுக்குச் சுற்றுலா வந்துள்ள வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் பல்வேறு இடங்களில் நடந்த ஹோலி கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பகர்கஞ்ச் பகுதியில் உள்ளூர்வாசிகளும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் சேர்ந்து ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஜப்பானைச் சேர்ந்த இளம் பெண்ணிடம் சில இளையர்கள் பாலியல் ரீதியில் அத்துமீறலில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது.
அந்தப் பெண் மீது முட்டையை வீசி, வண்ணப் பொடிகளை முகத்தில் பூசி அவர்கள் அத்துமீறியிருப்பதாகக் கூறப் படுகிறது. ஓர் இளையர், அந்த இளம்பெண் தலையில் அடித்துவிட்டுச் சென் றார். இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவியது.
இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணி புகார் அளிக்கவில்லை. ஆனால், சமூக ஊடகங்களில் பரவிய காணொளியை அடிப்படையாகக் கொண்டு காவல் துறையினர் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து வெளிநாட்டுப் பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்ட ஒரு சிறுவன் உள்பட மூன்று பேரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.