கடலூர்: நெய்வேலி நிலக்கரி நிறுவனம் இரண்டாவது சுரங்க விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்காக வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரிவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தை கையகப்படுத்தும் பணி நடக்கிறது.
இந்நிலையில், நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
என்எல்சி நிறுவனத்தைக் கண்டித்து கடலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை முழுக் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. பாதுகாப்புக்காக ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
காஞ்சிபுரத்தில் இருந்து வந்திருந்த காவலர்கள் நெய்வேலியில் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்றுக் காலை அதிவிரைவுப்படையினர் பயன்படுத்தும் வாகனம் ஒன்றுக்கு அடையாளம் தெரியாத சிலர் தீ வைத்ததாகக் கூறப்படுகிறது.
தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் துரித கதியில் செயல்பட்டு தீயை அணைத்தனர். இதுகுறித்து கடலூர் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், வாகனம் எரிக்கப்பட்ட பகுதியில் உள்ள கண்காணிப்புக் கருவிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் விரைவில் அடையாளம் காணப்படுவர் என்றும் அவர்கள்மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.

