மும்பை: இணைய சூதாட்டத்தை தடை செய்வதற்கு நாடு தழுவிய அளவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரத்தில் மாநில அரசு நிறைவேற்றக்கூடிய புதுச் சட்டத்தால் மட்டும் தீர்வு கிடைத்துவிடாது எனத் தமிழக அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இணைய சூதாட்ட தடைச் சட்டம் தொடர்பாக தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான கருத்து மோதல் நீடித்து வருகிறது.
இந்நிலையில், சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதம் நடத்தக் கோரி திமுக சார்பில் மக்களவை செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இணைய சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் சட்டத்தை மாநில அரசுக்கு திருப்பி அனுப்பிய ஆளுநர், கடிதம் ஒன்றையும் இணைத்து அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதில், தமிழக அரசுக்கு சில ஆலோசனைகளை அவர் வழங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
"இணைய விளையாட்டு உள்ளிட்ட இணையத்தளங்களுடன் தொடர்புள்ள சில அம்சங்களை ஒரு மாநில அரசால் மட்டும் தடைசெய்ய முடியாது. இது மத்திய அரசின் அதிகார வரம்புக்குள் வரக்கூடியது. இதற்கு தேசிய அளவில் நடவடிக்கை தேவை," என்று ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
மாநில அரசால் இணைய விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த மட்டுமே முடியும் என்றும் அதை முற்றிலும் தடைசெய்ய முடியாது என்றும் குறிப்பிட்டுள்ள ஆளுநர், இதை மீறி தடைச் சட்டத்தை நிறைவேற்றினால் அது நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணாக அமையும் எனச் சுட்டிக்காட்டி உள்ளார்.
இதற்கிடையே, மக்களவைச் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், இணைய சூதாட்டத்தால் தமிழகத்தில் நாற்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டதாக திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இணைய சூதாட்டத்தால் ஏராளமானோர் பணத்தை இழந்துள்ளனர் என்றும் அதை தடை செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆர்.என்.ரவி: இணைய சூதாட்டத்தைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கை தேவை

