புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்புக் கேட்கவேண்டும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியதால், மக்களவையில் காங்கிரஸ் கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால், தொடங்கிய முதல் நாளிலேயே அமர்வு முடங்கியது.
நாடாளுமன்ற வரவு செலவுத் திட்டக் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நேற்று காலை 11 மணிக்குத் தொடங்கியவுடன் மக்களவையில் ராஜ்நாத் சிங் உரையாற்றினார்.
அப்போது, "அண்மையில் 10 நாள் பயணமாக லண்டனுக்குச் சென்றிருந்த ராகுல் காந்தி, அங்குள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்திலும் இதர நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றபோது, இந்தியா வின் மக்களாட்சி, இந்திய அரசு குறித்து கடுமையாக விமர்சித்திருந்ததாகச் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, இந்தியாவை அவமதிக்கும் நோக்கில் ராகுல் காந்தியின் உரை இருந்ததாகவும் இந்தியா என்பது ஒட்டுமொத்த மக்களுக்குமானது என்பதால், அவரது பேச்சை அவையில் உள்ள அனைவரும் கண்டிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன், ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பகிரங்க மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்நிலையில், "அதானி வழக்கில் எங்களுக்கு நீதி வேண்டும்," என முழக்கமிட்டு காங்கிரஸ் எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே, இந்தக் கூட்டத் தொடரில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது, பீகார் முன்னாள் முதல்வர்கள் லாலுபிரசாத் யாதவ், ராப்ரி தேவி, தற்போதைய துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரின் வீடுகளில் சோதனை, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவிடம் விசாரணை என அடுத்தடுத்து அரங்கேறி வரும் சம்பவங்கள் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக சிபிஐ, அமலாக்கப் பிரிவு ஆகியவற்றை வைத்து தங்களை மத்திய பாஜக அரசு ஒடுக்க முயல்வதாகக் கூறி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடத் தயாராகி வருகின்றன.
ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடக்கும் இக்கூட்டத்தொடரில் 35 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

