பாடகர் மீது பணமழை பொழிந்த மக்கள்
வல்சாத்: குஜராத் மாநிலம், வல்சாத் நகரில் பிரபல குஜராத்தி நாட்டுப்புறப் பாடகர் கிர்திதன் காத்வியின் பக்திப் பாடல் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தன் இசைக் குழுவினருடன் காத்வி பாடிய பாடல்களைக் கேட்டு மெய் சிலிர்த்துப் போன ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பாடகர் காத்வி மீது ரூபாய் நோட்டுகளால் பணமழை பொழிந்தனர். இதற்கென்று 10, 20, 50, 100 ரூபாய் நோட்டுக் கட்டுகளை அவர்கள் கொண்டு வந்திருந்தனர். இதனால், மேடை முழுவதும் ரூபாய் நோட்டுகளாக காட்சி அளித்தது. "ஆதரவற்ற, நோய்வாய்ப்பட்ட பசுக்களின் பாதுகாப்பிற்காக நடத்தப்பட்ட பாடல் நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் நிதி முழுவதும் அறக்கட்ட ளைக்கே வழங்கப்படும்," என்று காத்வி கூறினார்.
நாய்கள் கடித்ததில் இரு குழந்தைகள் பலி
புதுடெல்லி: டெல்லியில் கடந்த மூன்று நாள்களுக்குள் தெரு நாய்கள் கடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த வெள்ளியன்று வீட்டில் இருந்த 7 வயது ஆனந்த் என்ற குழந்தை காணாமல் போய்விட்டதாக முதலில் கூறப்பட்டது. சிறுவன் இரண்டு மணி நேரம் கழித்து உடலில் பல காயங்களுடன் ஒதுக்குப்புறமான பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டான். இந்த துயரத்தில் இருந்து குடும்பத்தினர் மீள்வதற்குள், நேற்று ஆனந்தின் சகோதரரான 5 வயது ஆதித்யாவை தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் அந்தக் குழந்தையும் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அவசரமாகத் தரையிறங்கிய விமானம்
புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் இருந்து கத்தார் தலைநகர் தோஹாவிற்குச் சென்ற 6E-1736 என்ற இண்டிகோ விமானம், மருத்துவக் காரணத்திற்காக பாகிஸ்தானின் கராச்சி நகரில் அவசரமாகத் தரையிறங்கியது. ஞாயிறன்று இரவு 10.05 மணிக்கு அந்த விமானம் புதுடெல்லியில் இருந்து புறப்பட்டது. அங்கிருந்து நான்கு மணி நேரத்தில் தோஹா சென்று விடலாம் என்ற நிலையில், நள்ளிரவு தாண்டியதும் அவ் விமானம் கராச்சியில் தரையிறங்கியது. விமான நிலைய மருத்துவக் குழுவினர் அவரைப் பரிசோதித்ததில் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கைவிரித்துவிட்டனர். இறந்தவர் நைஜீரியாவைச் சேர்ந்த திரு அப்துல்லா, 60, என அடையாளம் காணப்பட்டது.

