செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
c284acd0-873a-4646-be29-eb34bee77968
-

சீருடை வாங்க மாணவர்களுக்கு

தலா ரூ.600 வழங்குவதாக அறிவிப்பு

சிம்லா: மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் தலா 600 ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கில் போடப்படும் என இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பள்ளி மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பேசிய அவர், "மாநிலத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் படிக்கும் 5.25 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சீருடை வாங்குவதற்கு உதவியாக இந்தத் தொகை வழங்கப்படுகிறது," எனத் தெரிவித்துள்ளார்.

ரயிலில் பெண் பயணியின் தலையில்

சிறுநீர் கழித்த பயணச்சீட்டுப் பரிசோதகர்

லக்னோ: இந்தியாவில் ரயிலில் பயணம் செய்த பெண் ஒருவரின் தலையில் பயணச்சீட்டு பரிசோதகர் (டிடிஇ) சிறுநீர் கழித்தது பேரதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.

கடந்த ஞாயிறன்று பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசைச் சேர்ந்த அப்பெண், தம் கணவருடன் அகால் தக்த் விரைவு ரயிலில் பயணம் செய்தார். அந்த ரயில் அமிர்தசரசில் இருந்து கோல்கத்தா நோக்கிச் சென்றது.

இந்நிலையில், 'ஏ1' பெட்டியில் பயணம் செய்த அப்பெண்ணின் தலையில் நள்ளிரவு நேரத்தில் முன்னா குமார் என்ற பயணச்சீட்டுப் பரிசோதகர் சிறுநீர் கழித்ததாகவும் அப்போது அவர் போதையில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

அவரது செயலால் திடுக்கிட்டுப்போன அப்பெண் கூச்சல் போடவே, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் திரண்டு, முன்னாகுமாரைப் பிடித்து ரயில்வே காவல்துறையிடம் ஒப்படைத்தனர். முன்னா குமார் இப்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

35 ஆண்டுகளுக்குப்பின் ஒன்றுகூடிய முன்னாள் காதலர்கள்

எர்ணாகுளம்: பள்ளியில் ஒன்றாகப் படித்தபோது மலர்ந்த காதல் கைகூடாமல் போன நிலையில், 35 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்தபோது தங்கள் குடும்பங்களை மறந்து முன்னாள் காதலர்கள் ஓட்டம் பிடித்தனர். எர்ணாகுளம், இடுக்கி பகுதிகளைச் சேர்ந்த அவ்விருவரும் ஓடிப்போக மூன்று வாரங்களாகத் திட்டமிட்டதாகச் சொல்லப்படுகிறது. இருவருக்கும் ஏற்கெனவே மணமாகி, குழந்தைகளும் உள்ளனர்.

இதனிடையே, 'அவர்களைக் காணவில்லை' என்று அவ்விருவரின் குடும்பங்களும் காவல்நிலையத்தில் புகாரளிக்க, காவல்துறையின் விசாரணையில் அவர்களது இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, காவல்துறை அவ்விருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதாகத் தெரிகிறது.