புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கும் பொதுத்துறை நிறுவனங்களிடம் பல லட்சம் கோடி ரூபாய் கடன் பெற்ற கௌதம் அதானிக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
அதானி குழுமம் பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டது.
இதுகுறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தவேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தியதால், வரவுசெலவுத் திட்ட கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 13ஆம் தேதி தொடங்கிய நிலையில், கடந்த நான்கு நாள்களாக நாடாளுமன்றம் செயல்படாமல் முடங்கியது.
இந்நிலையில், அதானி குழும முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தக் கோரி காங்கிரஸ், ஆம் ஆத்மி, கம்யூனிஸ்டு உள்ளிட்ட 16 கட்சிகளின் எம்பிக்கள் அமலாக்கத் துறை அலுவகத்துக்குப் பேரணியாகச் செல்ல முயன்றதை டெல்லி காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
அப்போது பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடி தான் செல்லும் நாடுகளுக்கு எல்லாம் கௌதம் அதானியையும் கூட்டிச் செல்வதாகக் கூறிய அவர், 1,650 கோடியுடன் தனது தொழிலைத் தொடங்கிய அதானியின் சொத்து மதிப்பு இப்போது 13 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது எப்படி என்று கேட்டார்.
அவர்கள் இருவருக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்தவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
இதனிடையே, அதானி குழும முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துமாறு அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர்கள் மனு அளித்தனர்.
இந்நிலையில், ஆளும் கட்சிகளும் பிற எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடிப்பதாக திரிணாமுல் மூத்த தலைவர் சுதிர் பந்தோபாத்யா குற்றம்சாட்டினார்.