செய்திக்கொத்து

2 mins read
4cd00dfd-1b49-4e5d-9c75-38a202ba7edf
-

வேலை இடத்திலும் யோகா பயிற்சி

புதுடெல்லி: பணி இடமாக இருந்தாலும் யோகா பயிற்சியைச் செய்வதே ஆரோக்கியமாக இருக்க ஒரே நல்ல வழி என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மத்திய ஆயுஸ் அமைச்சர் சர்வானந்த சோனாவாலின் யோகா குறித்த ஒரு நிமிட நேர விழிப்புணர்வுக் காணொளியை வெளியிட்டு, மறுபதிவு செய்துள்ள பிரதமர் மோடி, "பரபரப்பான சூழலில் பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் பணியிடங்களில்கூட யோகா பயிற்சியைச் செய்வதே ஆரோக்கியமாக வாழ ஒரு நல்ல வழியாக அமையும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வளர்ச்சிக்கு இளையர் சக்தி

புதுடெல்லி: இந்தியாவின் வளர்ச்சிக்கு இளையர் சக்தி உதவும் என்று மத்திய வேளாண், விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் வேளாண் பல்கலைக்கழக விழாவைத் தொடங்கி வைத்து உரையாற்றிய அமைச்சர், மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 60 விழுக்காட்டினர் இளையர்களாக இருப்பதாக சுட்டிக்காட்டினார். எந்தவித சவாலையும் இளையர் சக்தியால் சமாளிக்க முடியும் என்று நரேந்திர சிங் தோமர் நம்பிக்கை தெரிவித்தார்.

2030க்குள் விண்வெளி சுற்றுலா

பெங்களுரு: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குள் விண்வெளி சுற்றுலாத் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். "2030ஆம் ஆண்டுக்குள் இந்தியப் பயணிகளை விண்வெளிக்கு அழைத்துச் செல்ல இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. விண்வெளி சுற்றுலா செல்வதற்கு ஒரு நபருக்கு ரூ.6 கோடி கட்டணம் ஆகும். விண்வெளி சுற்றுலாப் பயணிகள் தங்களை விண்வெளி வீரர்கள் என்று அழைத்துக்கொள்ள முடியும்," என்றார்.