புதுடெல்லி: பிரதமர் அலுவலக உயர் அதிகாரி என்று கூறி ஸ்ரீநகரில் 'இசட்-பிளஸ்' சிறப்புப் பாதுகாப்புடன் வலம் வந்த குஜ ராத்தைச் சேர்ந்த ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். கிரண் பாய் படேல், பிரதமரின் அலுவலகத்தில் கூடுதல் இயக்குநராக பணியாற்றி வருவதாகக் கூறி காஷ்மீருக்கு இவ் வாண்டு இரண்டு முறை சுற்றுலா சென்றுள்ளார்.
அங்குள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் தங்க வைத்து குண்டு துளைக்காத காருடன் 'இசட்-பிளஸ்' பாதுகாப்பும் காஷ்மீர் மாநில நிர்வாகம் அவருக்கு வழங்கியது.
கடந்த மாதம் முதல் முறையாகச் சென்ற அவர் அந்த மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
துணை ராணுவப் படையினர் புடைசூழ பல இடங்களை அவர் சுற்றிப் பார்த்துள்ளார்.
இது தொடர்பான தகவல்களை அவர் டுவிட்டரில் பதிவிட்டார்.
குஜராத் மாநில பாஜக பொதுச் செயலாளர் பிரதீப் சிங் பகேலா உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டுவிட்டரில் இவரை பின் தொடர்பவர்களாக உள்ளனர்.
இந்த நிலையில் இம்மாதம் 2ஆம் தேதி மீண்டும் அவர் ஸ்ரீநகருக்கு வந்தார்.
ஆனால் அவர் மீது மாவட்ட ஆட்சியருக்குச் சந்தேகம் ஏற்பட்டது.
அவர் அளித்த புகாரின் அடிப்படையில் பலே ஆசாமியை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் அவர் மோசடி நபர் என்பது தெரிய வந்தது. அவர் கைது செய்யப்பட்ட விவகாரத்தை மத்திய, மாநில அரசுகள் ரகசியமாக வைத்திருந்த நிலையில், நீதிமன்றத்தில் அவர் முன்னிலையானதால் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக் கிறது.

