மும்பை: உலகின் ஆகக்குள்ளமான உடற்கட்டழகர் என்ற கின்னஸ் சாதனைக்குச் சொந்தக்காரரான பிரதிக் விட்டல் மொகித்தே, 28, திருமண வாழ்வில் அடியெடுத்து வைத்துள்ளார்.
மூன்று அடி நான்கு அங்குல உயரமே கொண்ட இவர், 22 வயதான ஜெயாவைக் கைப்பிடித்தார். ஜெயாவும் பிரதிக்கைப்போல் குள்ளமானவர்தான்.
உடற்கட்டழகராக விரும்பிய மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பிரதிக், கடந்த 2012ல் அதற்கான பயிற்சிகளைத் தொடங்கினார். தமது உயரம் காரணமாக தொடக்கத்தில் அவரால் உடற்பயிற்சிகளைச் செய்ய முடியவில்லை. ஆனாலும், மனந்தளராமல் விடாமுயற்சியுடன் இவர் செயல்பட்டார்.
கடந்த 2016ல் முதன்முதலாக உடற்கட்டழகுப் போட்டியில் பிரதிக் கலந்துகொண்டார்.
அதற்கு ஐந்தாண்டுகளுக்குப் பின்னர், உலகின் ஆகக் குள்ளமான உடற்கட்டழகராக கின்னஸ் சாதனை அமைப்பு இவரை அங்கீகரித்தது.
"கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்பது என் கனவு. அதனை நனவாக்கியதே என் வாழ்க்கையில் ஆகப்பெரிய விஷயம்," என்றார் பிரதிக்.
ஜெயாவை முதன்முதலில் பார்த்ததுமே தமக்குப் பிடித்துப்போனதாக இவர் குறிப்பிட்டார்.

