மும்பை: மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேயை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துப் பேசியது அம்மாநில அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெற்றது. இப்போட்டியை நேரில் கண்டு ரசித்தார் ரஜினிகாந்த்.
அதன் பின்னர் புத்தக வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்ற அவர், திடீரென உத்தவ் தாக்கரேயின் இல்லத்துக்குச் சென்றார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து உத்தவ் தாக்கரேயுடன் அவர் தனியாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. அதுகுறித்த மேலதிக தகவல்கள் எதையும் இரு தரப்புமே வெளியிடவில்லை.
எனினும் ரஜினிகாந்த் மீண்டும் தங்கள் இல்லத்துக்கு வந்தது மகிழ்ச்சி அளித்துள்ளதாக ஆதித்ய தாக்கரே தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இது அரசியலுக்கு அப்பாற்பட்ட மரியாதை நிமித்தமான சந்திப்பு என 'உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா' கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதற்கு முன்பு கடந்த 2010ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சிவசேனா தலைவர் பால்தாக்கரேயை அவரது இல்லத்தில் சந்தித்திருந்தார் ரஜினி.

