கொச்சி நகராட்சிக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்த பசுமைத் தீர்ப்பாயம்
திருவனந்தபுரம்: திடக்கழிவு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தையடுத்து கேரள மாநிலத்தின் கொச்சி மாநக ராட்சிக்கு ரூ.100 கோடி ரூபாய் அபராதம் விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. எர்ணாகுளம் மாவட்டம் பிரம்மபுரம் பகுதியில் திடக்கழிவு மையம் உள்ளது. கடந்த 6ஆம் தேதி இங்கு தீ விபத்து நிகழ்ந்தது. அப்போது அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பைகள் எரிந்ததில், அப்பகுதியை புகை மண்டலம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். 12 நாள்கள் போராட்டத்துக்குப் பிறகே தீ அணைக்கப்பட்டது. இதை யடுத்தே ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அமித்ஷா: தாய்மொழியை மறவாதீர்
அகமதாபாத்: வாழ்க்கையில் எதைச் செய்ய மறந்தாலும் தாய்மொழியை மட்டும் மறந்துவிடக்கூடாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். குஜராத்தில் உள்ள சயோஜிராவ் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், தாய்மொழி காரணமாக நாம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டோம் என்று நினைப்பவர்கள் அத்தகைய தாழ்வு மனப்பான்மையில் இருந்து வெளிவர வேண்டும் என அறிவுறுத்தினார். மொழி என்பது ஓர் உணர்வு என்றும் தாய்மொழியை விட்டுவிடக்கூடாது என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.
ரயில்வே பணிக்கு நிலங்கள் லஞ்சம்: லாலு மீது வழக்கு; சிபிஐ முடிவு
பாட்னா: ரயில்வே துறையில் பணியில் சேர, நான்காயிரம் பேரிடம் லஞ்சமாக நிலங்களைப் பெற்றது தொடர்பில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மீது வழக்குப் பதிவு செய்ய உள்ளது சிபிஐ. மத்திய ரயில்வே அமைச்சராக 2004 முதல் 2009ஆம் ஆண்டு வரை பதவி வகித்தபோது, லாலு பிரசாத்தின் குடும்பத்தார் இத்தகைய முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இதுபற்றி சிபிஐயும் அமலாக்கத்துறையும் விசாரித்து வருகின்றன. இந்நிலையில் 4,000 பேரிடம் இவ்வாறு லஞ்சம் பெற்றதாக சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து விரிவான விசாரணை நடத்தப்படும் எனத் தெரிகிறது.
சிறு தானிய மாநாடு: பாப்பம்மாள் பாட்டி காலைத் தொட்டு ஆசிபெற்ற பிரதமர்
புதுடெல்லி: உணவு பாதுகாப்பு தொடர்பான சவால்களைச் சமாளிக்க சிறுதானியங்கள் உதவும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் சிறுதானிய மாநாட்டை தொடங்கி வைத்த அவர், இந்தியாவின் கோரிக்கையை ஏற்று 2023ஆம் ஆண்டை அனைத்துலக சிறு தானியங்கள் ஆண்டாக ஐநா அமைப்பு அறிவித்திருப்பது இந்தியாவுக்குக் கிடைத்த பெரும் கௌரவம் என்றார். "உலகளவில் சிறு தானியங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க இந்தியா தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது," என்றார் பிரதமர் மோடி. இதற்கிடையே, இம்மாநாட்டில் தமிழகத்தின் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 107 வயதான இயற்கை விவசாயியும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான பாப்பம்மாள் பாட்டியும் பங்கேற்றார். அப்போது பிரதமர் மோடியை சந்தித்துப் பேசிய அவர், பிரதமருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து மூதாட்டி பாப்பம்மாளின் காலைத் தொட்டு வணங்கி அவரிடம் ஆசி பெற்றார் பிரதமர் மோடி.


