புதுடெல்லி: நாட்டில் உள்ள பெண்கள் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருவதாக கூறியதை அடுத்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியிடம் டெல்லி காவல்துறை விசாரணை மேற்கொண்டது.
அண்மையில் காஷ்மீர் சென்றிருந்தபோது அங்கு நடைபெற்ற கூட்டத்தில் பேசியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
அவரது இந்தப் பேச்சு சமூக வெளியில் சலசலப்பை ஏற்படுத்தியதை அடுத்து, டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், ராகுல் பேச்சு குறித்து விசாரிக்க டெல்லி காவல்துறை அதிகாரிகள் நேற்று அவரது வீட்டுக்குச் சென்றனர்.
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியவர்கள் குறித்து தன்னிடம் இருக்கும் விவரங்களை ராகுல் காந்தி காவல்துறைக்கு அளிக்க வேண்டும் என்றும் அப்போதுதான் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க இயலும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
ராகுல் வீட்டின் முன்பு காவலர்கள் குவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியினரும் அங்கு குவிந்தனர்.
காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அனுமதி இன்றி காவல்துறை இவ்வாறு செயல்பட்டிருக்க இயலாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
"ராகுல் மேற்கொண்ட இந்திய ஒற்றுமை யாத்திரை முடிந்து 45 நாள்கள் ஆகின்றன. உண்மையிலேயே டெல்லி காவல்துறைக்கு அக்கறை இருந்திருந்தால், ஒற்றுமைப் பயணத்தின் போது பேசியது தொடர்பாக இத்தனை நாள்கள் அமைதி காத்தது ஏன்" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

