ஜப்பான்: ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் ரூ.320,000 கோடி முதலீடு செய்யப்படும்
புதுடெல்லி: இந்தியா - ஜப்பான் இடையேயான உறவை உலகளாவிய வகையில் மேம்படுத்த ஒப்பந்தம் செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடியும் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவும் கூட்டாக அறிவித்தனர். மேலும் இந்த ஒப்பந்த நீட்டிப்பானது, அமைதியான, நிலையான மற்றும் வளமான இந்தோ-பசிபிக் வட்டார வளர்ச்சிக்கு உதவும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் இந்தியாவுக்கு வருகையளித்தார்.
டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா இருவரும், இரு நாடுகளையும் சேர்ந்த உயர்மட்ட குழுவினர் அடங்கிய கூட்டத்தில் ஆலோசனை நடத்தினர்.
இந்தக் கூட்டத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது இரு நாடுகளுக்கு இடையே பரஸ்பர ஒத்துழைப்பு, வர்த்தகம் உள்ளிட்டவற்றை மேம்படுத்துவது குறித்து இரு நாட்டுப் பிரதமர்களும் ஆலோசித்தனர். குறிப்பாக இந்தோ - பசிபிக் வட்டாரத்தின் பாதுகாப்பு தொடர்பாகவும் அவர்கள் ஆலோசித்தனர்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. அதேநேரத்தில், ஜி7 உச்சநிலை மாநாட்டுக்கு ஜப்பான் தலைமை தாங்குகிறது.
உலக நலனுக்காக இருநாடுகளும் பல்வேறு துறைகளில் இணைந்து செயல்பட இது சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.
இருதரப்பு உறவுகளில் குறிப்பாக பாதுகாப்பு, மின்னணுவியல் தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் முதலீடு மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் முன்னேற்றம் குறித்து இரு நாடுகளும் ஆய்வு செய்யவுள்ளன. முக்கியமாக தொழில்நுட்பங்களுக்கான நம்பகமான விநியோகச் சங்கிலிகளின் முக்கியத்துவம் குறித்தும் விவாதிக்கப்பட்டது," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஜப்பானின்
முதலீடு அதிகரிக்கும்
ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியாவுடன் ஜப்பான் எப்போதும் நட்புறவைப் பாராட்டி வருகிறது. இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு தொடர்ந்து வலுவடையும்.
இந்தியாவின் வளர்ச்சிக்கு ஜப்பான் தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்கும்.
உக்ரேனில் ரஷ்யா தொடுத்துள்ள போரை அடுத்து உலக அளவில் உணவு மற்றும் எரிசக்திப் பொருள்களின் விலையேற்றம் போன்ற அனைத்துலகச் சவால்களை எதிர்கொள்ள இந்த இருநாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படும் என்றும் ஜப்பானிய பிரதமர் கிஷிடா தெரிவித்தார். அதேநேரத்தில் ஜப்பானின் பொருளாதார வாய்ப்புகளுக்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்தும்.
இந்தியாவில் ஜப்பான் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.320,000 கோடியை முதலீடு செய்யவுள்ளது என்று அந்த அறிக்கையில் ஜப்பானியப் பிரதமர் கிஷிடா தெரிவித்துள்ளார்.